சென்னை: சென்னை அண்ணா நகரை சேர்ந்த சித்ரா என்பவர் தாக்கல் செய்த வழக்கில், வீட்டு வேலைகள் செய்து மாதம் 6 ஆயிரம் ரூபாய் வருமான ஈட்டி தன்னுடய பெண் குழந்தையை கல்லூரி வரை படித்தாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தன் மகளுக்கு திருமண செய்து வைப்பதற்காக அரசின் தாலிக்கு தங்கம் திட்டமான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டத்தில் திருமண நிதியுதவி பெற கடந்த 2021 -ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அதை பரிசீலித்த அயனாவரம் தாசில்தார், சித்ராவின் ஆண்டு வருமானம் 72 ரூபாய் விட அதிகமாக இருப்பதாக கூறி விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார்.
ஆண்டு வருமானத்தை தவறாக குறிப்பிட்டுள்ளதாகவும், அதை திருத்தி இத்திட்டத்தில் தன்னுடைய மகள் திருமணத்திற்கு நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும் என சித்ரா மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? எத்தனை பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது? மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி எவ்வளவு? என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணை செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.