சென்னை: தமிழ்நாடு பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்துக்களைப் பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி மே 12ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் செயல்படவில்லை என்றும், சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல் தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், சவுக்கு சங்கர் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார்? என்னவெல்லாம் செய்ய மாட்டார்? என உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், சவுக்கு சங்கர் மீது சட்டத்திற்கு உட்பட்டு தான் குண்டர் சட்டம் போடப்பட்டது. அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4 மாதத்தில் சட்டத்திற்கு உட்பட்டு நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டனர்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், குண்டர் சட்டம் போடப்படுவதற்கு முன், மே 12ஆம் தேதி எத்தனை வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத் தரப்பில், 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் குண்டர் சட்டம் போடப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மே 12ஆம் தேதி முன்பு வரை 1 வழக்குகளில் மட்டுமே கைது செய்ததாகக் காட்டப்பட்டுள்ளது. மேலும், 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஏன் கைது செய்யப்படவில்லை எனவும், சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தை சென்னை காவல்துறை ஆணையர் சுதந்திரமாக பதிவு செய்தாரா அல்லது அழுத்தத்தின் காரணமாக பதிவு செய்தாரா எனவும் கேள்வி எழுப்பினர்.
பின்னர் அரசுத் தரப்பில், "சவுக்கு சங்கர் யூடியூபர் என்ற பெயரில் நீதித்துறை, காவல்துறை, வழக்கறிஞர் மற்றும் அரசு என அனைத்து துறைகளையும் தரக்குறைவாக பேசியுள்ளார். கடந்த ஒரு வருடமாக அவதூறு கருத்துக்களை கூறிய போதும், அரசு நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்தது.
தற்போது பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதால் தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், பத்திரிகையாளர் என்பவர் மக்களுக்கான செய்திகளை உண்மையாக, ஒழுக்கமாக கொடுப்பவராக மட்டுமே இருக்க வேண்டும். ஒழுக்கம் தவறினால் அவர் பத்திரிகையாளராக இருக்க முடியாது" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேசிய நீதிபதிகள், சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முடிக்கப்படுகிறது. நேற்று (மே 23) விசாரணைக்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து புழல் சிறையிலேயே இருக்க சிறைத்துறைக்கு அறிவுறுத்த அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், சவுக்கு சங்கர் வழக்கில் இன்று மதியம் தீர்ப்பு வழங்கப்படும் என தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: யூடியூபர் சவுக்கு சங்கர் மீது திருச்சி சூர்யா சிவா பரபரப்பு புகார்!