சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில், கடந்த 2017ஆம் ஆண்டு சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு, உரிமை மீறல் நோட்டீசை அனுப்பியது.
இந்த நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, உரிமைக் குழு திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.
அதனை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டாவது நோட்டீசையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டமன்ற செயலாளர் மற்றும் உரிமைக் குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், நோட்டீஸ் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தற்போதைய சபாநாயகர் தான் முடிவெடுக்க முடியும் என்பதால், அதனை சபாநாயகரின் முடிவுக்கே விட்டு விட வேண்டுமென கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சட்டமன்றம் மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றோடு ஒன்று தலையிடக்கூடாது என தெரிவித்தனர்.
மேலும், நோட்டீஸ் மீது இறுதி முடிவெடுக்கப்படாத நிலையில், அதில் தலையிட்டு ரத்து செய்தால் அது மிகவும் ஆபத்தானது, தவறான முன்னுதாரணம் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். பின்னர், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: காலநிலை மாற்ற தாக்க மதிப்பீடு ஏன் அவசியம்? வழக்கறிஞர் வெற்றி செல்வன் கூறுவது என்ன?