சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம், சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1,825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன், கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் மனு மீதான விசாரணைக்கு அனுப்பபட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால், பட்டிலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விதிகளின்படி புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, முரசொலி அறக்கட்டளை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முரசொலி அறக்கட்டளை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், மூத்த வழக்கறிஞர் ஆஜராகும் வகையில் விசாரணையை தள்ளிவைக்க கோரியதை அடுத்து, விசாரணை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பணிப்பெண் விவகாரம்; பிப்.6-இல் ஜாமீன் மனு மீது தீர்ப்பு!