சென்னை: தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் உதவி பிரிவு அலுவலராக பணிபுரிந்து வந்தவர், ராமச்சந்திரன்(32). இவர், கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இளையனார் குப்பம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த விழுப்புரம் கோட்டத்தின் அரசு போக்குவரத்து கழக பேருந்து அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், அரசு ஊழியர் ராமச்சந்திரன் உயிரிழந்தார். இதனால், அவரது மனைவி கீதா, தனது கணவரின் இறப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில், நீதிபதி தங்கமணி கணேஷ் முன்பு (பிப்.27) விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, அரசு போக்குவரத்து கழகம் தரப்பில், “ராமச்சந்திரனின் கவனக்குறைவால் விபத்து நடந்துள்ளது. திடீரென்று சாலையைக் கடக்க முயன்றதால் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது” என வாதிடப்பட்டது.
இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி கணேஷ், “அரசு போக்குவரத்து கழகத்தின் குற்றச்சாட்டை நிரூபிக்க, போதிய ஆவண ஆதாரங்கள் தாக்கல் செய்யவில்லை. அஜாக்கிரதை மற்றும் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே
விபத்துக்கு காரணம். எனவே, விபத்தில் உயிரிழந்த ராமச்சந்திரனின் குடும்பத்தினருக்கு ரூ.91 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்” என்று விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டத்திற்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம்: எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் வலுக்கட்டாயமாக கைது - ஏஐகேகேஎம்எஸ் கண்டனம்