சென்னை: இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி 1964ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரியில், பட்டப்படிப்பு (BSMS) 565 மாணவர்களும் மற்றும் பட்ட மேற்படிப்பில் 170 மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், இக்கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவுகளில், நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 700 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புறநோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியும் கிடைக்கும் வகையில் அமையும் . இக்கல்லூரிக்கு புதிய ஆண்கள் விடுதி கட்டிடம் கட்டுவதன் மூலம், மாணவர்களுக்கு பாதுகாப்பாக தங்கும் வசதியும், தரமான உணவு கிடைக்கும் நிலையும் உருவாகும். இதன் மூலம் வெளிமாவட்டங்களிலிருந்து இங்கு வரும் மாணவர்கள் பயமின்றித் தங்கிடவும் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்கு மாணவர்கள் குறித்த கவலையைப் போக்கும் விதமாகவும் அமையும்.
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் வளர்ச்சிக்கும் மற்றும் மாணவர்கள், நோயாளர்கள், பணியாளர்கள் என அனைவரின் நலனிற்கும் புறநோயாளிகள் கட்டிடம், ஆண்கள் விடுதி கட்டிடம் மற்றும் கல்விசார் கட்டிடம் ஆகிய புதிய கட்டுமானப் பணிகள் மூலமாக உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு (Infrastructure Development) ரூ.35.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மதுரை, சேலம், கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டிடம் மற்றும் உபகரணங்களுடன் கூடிய பன்னோக்கு பல் மருத்துவ நிலையம் அமைக்கப்படும். தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் (உலக வங்கியின் உதவியுடன்) அடித்தட்டு மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.
பெரும்பாலான பல் நோய்கள் தடுக்கக்கூடியவை மற்றும் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டாலும், பெரும் உடல்நலச் சுமையை ஏற்படுத்தி, வாழ்நாள் முழுவதும் மக்களை பாதித்து, வலி, சிதைவு மற்றும் மரணத்தையும் கூட ஏற்படுத்துகிறது. 2022ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, வாய் தொடர்பான நோய்கள் உலகளவில் 350 கோடி மக்களை பாதிக்கின்றன. மேலும், 4 பேரில் 3 பேர் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, வாய் மற்றும் பல் தொடர்பான பல்நோக்கு மருத்துவ சிகிச்சை மையங்கள் குறைவாக இருக்கும் காரணங்களால், சரியான நேரத்தில் வாய் மற்றும் பல் தொடர்பான உரிய சிகிச்சை பெற பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இது நோயாளியின் பொது ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
பல புதுமையான முயற்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தனியார் துறைக்கு இணையான உயர் பல் சிறப்புப் பராமரிப்பு சேவைகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக, மதுரை, சேலம், கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் நவீன பல் மருத்துவ உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கும் உயர்சிறப்பு பல் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில், ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிக்கும், ரூ.3.45 கோடி மதிப்பீட்டில் நவீன பல் மருத்துவ உபகரணங்களும், நான்கு மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்படும். இந்த மையங்கள் சிறப்பு பல் பராமரிப்பு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட பல் மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செயல்படும்.
இத்திட்டத்தின் மூலம், உயர்தர பல் சிகிச்சைகளை வழங்குவதன் மூலம், பல் சுகாதாரம், பல் ஆரோக்கியம் மற்றும் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். மேலும், பொது ஆரோக்கியத்தில் பல பக்க விளைவுகளைத் தடுக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவும்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகப் பெண்ணின் காலில் மூன்று முறை விழுந்த பிரதமர் மோடி - காரணம் என்ன?