சேலம்: தமிழகம் முழுவதும் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சி நிறுவனங்களில் சுமார் 50 ஆயிரம் பேர் சிலிண்டர் டெலிவரி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் முழுமையாக வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மேலும், டெலிவரி செய்யும் போது வாடிக்கையாளர்களிடம் கமிஷன் பெற்றுக் கொள்ளும் படி தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சட்டப்படி வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும், தீபாவளி போனஸாக ரூ.12 ஆயிரம் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும், அரசு விடுமுறை நாட்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள காஸ் ஏஜென்சிகளில் உள்ள சிலிண்டர் டெலிவரி மேன்கள் அடங்கிய அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில், வரும் 26ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கத்தின் சார்பில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது, “தமிழகம் முழுவதும் தனியார் கேஸ் ஏஜென்சி நிறுவனங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு மெத்தம்பெட்டமைன் விற்க முயன்ற கும்பல்... சேலம் போலீசார் அதிரடி வேட்டை..!
சேலத்தில் மட்டும் 80க்கும் மேற்பட்ட ஏஜென்சிகளில் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் என்பது கிடையாது. டெலிவரி கட்டணங்களையும் ஏஜென்சிகள் வழங்குவதில்லை. எனவே, தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச சம்பளத்தை ஏஜென்சிகள் வழங்க வேண்டும், தீபாவளிக்கு போனஸ் வழங்க வேண்டும், சட்டபடியான மருத்துவ விடுப்பு, வார விடுமுறை ஆகியவை வழங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் வரும் 26 ஆம் தேதி அறிவித்துள்ளோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றபடவில்லை என்றால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் தயாராக உள்ளோம். மேலும், எங்களது கோரிக்கை மீது கவனம் ஈர்ப்பதற்காக வருகிற 24 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆட்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்