சேலம்: தமிழ்நாட்டில் 10 நாட்களுக்குள் மணல் குவாரிகளை திறக்கவில்லையெனில் லாரி உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் தேர்தலை புறக்கணித்து தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி ஒப்படைப்போம் என சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் கண்ணையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது, தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் எம்.சாண்ட் (M Sand) கிரசர் உரிமையாளர்கள், செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் விலையை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 4440 எம்.சாண்ட் குவாரிகளில் 4000 குவாரிகள் ஆவணங்கள் ஏதும் இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும், கடந்த 90 நாட்களில் எம்.சாண்ட் விலை யூனிட்டுக்கு 1500 உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்த அவர் எம்.சாண்ட் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு முழுவதும் கிரஷர் உரிமத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசே கிரசரை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், தமிழ்நாட்டில் 10 நாட்களுக்குள் போர்க்கால அடிப்படையில் மணல் குவாரிகளை தமிழ்நாடு அரசு திறக்கவில்லை எனில் தங்களது லாரிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டு தங்களது வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி ஒப்படைப்போம் என எச்சரித்துள்ளார். மேலும், மணல் குவாரிகளை திறக்கவில்லை என்றால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கும்பகோணம் அருகே ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது!