தூத்துக்குடி: தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 286 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று கோவில்பட்டி தாலூகா அலுவலகத்தில் இருந்து வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
கோவில்பட்டி வருவாய் வட்டமான கயத்தார் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றால், கயத்தார் சாலைப்புதூர் சுங்கச்சாவடியை தாண்டி தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்குப்பெட்டி மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள், சுங்கச்சாவடி கட்டணம் கொடுத்தால் தான் கொண்டு சொல்வோம் என்று கூறி வருவதால், வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருள்களைக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இதை போன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருள்களைக் கொண்டு சென்ற போது தங்களிடம் சுங்கச்சாவடிக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வாகன ஓட்டிகள் கோவில்பட்டி வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், கோவில்பட்டி வட்டாட்சியர் சரவண பெருமாள் வாகன ஓட்டிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சுங்கச்சாவடிக் கட்டணத்திற்கான பணம் கொடுக்கப்பட்டதை அடுத்து, வாகனங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் சென்றனர்.