தூத்துக்குடி: 'முத்து நகரம்' என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது தூத்துக்குடி மாநகர். தமிழ்நாட்டில் நட்சத்திர அந்தஸ்துடன் திகழும் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ளன.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் இங்கு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி மற்றும் அப்போதைய பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இரண்டு பெண் வேட்பாளர்கள் நேரடியாக களம் கண்டனர். இதனால் தூத்துக்குடி நட்சத்திர தொகுதியாக மாறியது.
அந்தத் தேர்தலில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 14,25,401 உள்ள நிலையில், ஆண்கள் 7,00,371 வாக்காளர்களும், பெண்கள் 7,24,912 வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 116 வாக்காளர்களும் உள்ளனர். இத்தேர்தலில், 9,91,263 வாக்குகள் (71.3%) பதிவாகின.
பதிவான மொத்த வாக்குகளில் திமுக வேட்பாளர் கனிமொழி 5,63,143, வாக்குகளும் (56.81%), பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் 2,15,934 (21.78%) வாக்குகளும் பெற்றனர். சுயேச்சை வேட்பாளர் புவனேஸ்வரன் 76,886 வாக்குகள் (7.75%), நாம் தமிழர் கட்சியின் கிறிஸ்டன்டைன் ராஜசேகர் 49,222 ஓட்டுகள் (4.97%) மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பொன்குமரன் 25,702 வாக்குளையும் (2.59%) பெற்றனர்.
கனிமொழியின் வெற்றிக்கான காரணங்கள்?: திமுக, பாஜக என இரு வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட கட்சிகளின் சார்பில் கனிமொழி, தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இரு பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டதால், தூத்துக்குடி தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றது. இந்தப் போட்டியின் இறுதியில் கனிமொழி, 3,47,209 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தமிழிசையை வீழ்த்தினார்.
2019 மக்களவைத் தேர்தலுக்கு முன், தமிழகத்தில் நடைபெற்று வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் வெடித்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டமும், அந்தப் போராட்டத்தின் உச்சமாக 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மோசமான இச்சம்பவம், தூத்துக்குடி மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த தாக்கம், 2019 தேர்தலில் எதிரொலித்தது. இதுவே திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றிப்பெற முக்கிய காரணமாக இருந்தது. அத்துடன், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களை கணிசமாக கொண்ட மாவட்டமாக திகழும் தூத்துக்குடியில், இச்சிறுபான்மை சமூகத்தினரின் பெருவாரியான வாக்குகள் திமுகவுக்கு கிடைத்ததாக கருதப்பட்டதும் அதன் வெற்றிக்கு மற்றொரு காரணமாகும்.
2024 தேர்தலில் வாக்குப்பதிவு எவ்வளவு?: அண்மையில் நடைபெற்று முடிந்த 2024 தேர்தலில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மொத்தம் வாக்காளர்கள் 14,58,430 உள்ள நிலையில், 7,13,388 வாக்காளர்களும், பெண்கள் 7,44,826 மூன்றாம் பாலினத்தவர் 216 வாக்காளர்களும் உள்ளனர். இத்தேர்தலில் மொத்தம் 9,75,468 (66.88%) வாக்குகள் பதிவாகி உள்ளன.
திமுக -அதிமுக நேரடி போட்டி: தூத்துக்குடியில் கடந்த முறை திமுக வேட்பாளரான கனிமொழிக்கு, பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் போட்டியை கொடுத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இந்த முறை, பாஜக கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி தமாகவுக்கு ஒதுக்கப்பட்டு, எஸ்டிஆர் விஜயசீலன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தமாகவுக்கு வாக்கு வங்கியே இல்லாத தூத்துக்குடி தொகுதி அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோதே, இங்கு திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தான் நேரடி போட்டி எனும்படியாக களம் மாறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
திமுக வேட்பாளர் கனிமொழி இங்கு மீண்டும் வெற்றிப் பெற, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தூத்துக்குடியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அத்துடன் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமான திமுக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் பம்பரம் போல் சுழன்று தேர்தல் பணியாற்றி வாக்காளர்களை கவர்ந்தனர்.
மத்திய அரசை வெளுத்து வாங்கிய கனிமொழி: குறிப்பாக கனிமொழி தமது தேர்தல் பிரச்சாரத்தின்போது, மத்திய அரசுக்கு எதிராக முன்வைத்த விமர்சனங்கள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றன. "'கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கடும்மழையால், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை, வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி இங்கு வரவில்லை. அவருக்கு பதிலாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்பி வைத்தார். ஆனால், வெள்ள நிவாரண நிதியாக ஒரு ரூபாய் கூட தராத மத்திய நிதியமைச்சர், 'நீங்கள் கேட்கும் போதெல்லாம் பணத்தைகூட நாங்கள் என்ன ஏடிஎம் இயந்திரமா?'" என்று அவர் கேட்டார் என, மத்திய அரசை டார்கெட் செய்து, கனிமொழி மேற்கொண்ட பிரச்சாரம் வாக்காளர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
மேலும் அவர், "நாம் நமது வரிப் பணத்தை தானே கேட்கிறோம். தமிழ்நாடு ஒரு ரூபாய் கொடுத்தால் மத்திய அரசு நமக்கு திருப்பிக் கொடுப்பது 29 பைசா தான்" என்று பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் கனிமொழி பேசியதும், வாக்காளர்களை மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது.அத்துடன், "எனது இரண்டாம் தாய் வீடான தூத்துக்குடிக்கு பணியாற்ற மீண்டும் வாய்ப்பு வழங்கிட வேண்டும்" என்று சென்டிமென்ட்டாக பேசியும் தொகுதி மக்களின் வாக்குகளை பெற முயன்றார் கனிமொழி.
அதிமுக வேட்பாளரின் சென்டிமென்ட் டச்: கனிமொழியின் தேர்தல் பிரச்சாரம் இப்படி என்றால், அதிமுக வேட்பாளரான, அக்கட்சியின் தென் சென்னை வட மேற்கு மாவட்டம், தி.நகர் வடக்கு பகுதி செயலாளரும், மருத்துவருமான ஆர்.சிவசாமி வேலுமணி தன் பங்கிற்கு பிரச்சாரத்தில் பட்டையை கிளப்பினார் என்று தான் சொல்ல வேண்டும். "தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட நான் இந்த ஊரின் மண்ணின் மைந்தன் என்று வாக்காளர்களை சென்டிமென்ட்டாக தாக்கிய அவர், தூத்துக்குடி எம்.பி. ஆக இருக்கும் கனிமொழி, தொகுதி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. விழாக்களில் மட்டும் கலந்து கொண்டு விளம்பரம் தேடி உள்ளார்" என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
"நான் தூத்துக்குடி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால் விவசாயிகள், உப்பள தொழிலாளர்கள், பனை தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபடுவேன்" என்று வாக்குறுதிகள் அளித்து வாக்காளர்களை கவர்ந்தார். தூத்துக்குடியில் திமுக, அதிமுக இடையே நிலவும் நீயா, நானா போட்டியில் வெற்றி எனும் முத்தை எடுக்கப் போவது யார் என்பது ஜூன் 4 இல் தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024: திமுகவுக்கு சிக்கலைக் கொடுக்கும் தொகுதிகள்! முடிவு என்ன வரும்?