சிவகங்கை: 1967ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் இருந்து சிவகங்கை மக்களவைத் தொகுதி பிரிக்கப்பட்டுத் தனி மக்களவைத் தொகுதியாக உருவானது. 2009ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, ஆலங்குடி, திருமயம் என 6 சட்டமன்றத் தொகுதிகளைச் சிவகங்கை மக்களவைத் தொகுதி உள்ளடக்கியுள்ளது. இந்த 6 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர், மானாமதுரை, திருமயம், ஆலங்குடி தொகுதிகளில் திமுகவும் சிவகங்கையில் அதிமுகவும் காரைக்குடியில் காங்கிரஸும் வெற்றி பெற்றன.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் இதுவரை நடைபெற்றுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 9 முறையும் திமுக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
2019 தேர்தல் நிலவரம்: 2019ல் 15,50,390 என மொத்த வாக்காளர்கள் இருந்தனர். இதில், 7,65,811 ஆண் வாக்காளர்களும், 7,84,513 பெண் வாக்காளர்களும் மற்றும் 66 மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர். 2019 தேர்தலில் 10,75,185 மொத்த வாக்குகள் பதிவாகி இருந்தன. அதாவதுமொத்தம் 69.34 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்தி பி.சிதம்பரம் 5,66,104 வாக்குகளும், அதிமுக கூட்டணியிலிருந்த பாஜக சார்பில் போட்டியிட்ட எச்.ராஜா 2,33,860 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வி.சக்தி பிரியா 72,240 வாக்குகளும் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட சினேகன் 22,931 வாக்குகளும் பெற்றனர். இதில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி பி.சிதம்பரம் 3,32,244 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 தேர்தல் நிலவரம்: 2024ல் 16,33,857 என மொத்த வாக்காளர்கள் உள்ளனர். இதில் 8,02,283 ஆண் வாக்காளர்களும், 8,31,511 பெண் வாக்காளர்களும் மற்றும் 63 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர். 2024 தேர்தலில் 10,49, 887 மொத்த வாக்குகள் பதிவாகி இருந்தன. மொத்த வாக்குப்பதிவு 64.26 சதவீதமாகும்.
இந்த முறையும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக கார்த்தி பி.சிதம்பரம் நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் சேவியர் தாஸ். பாஜக கூட்டணியிலுள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேவநாதன் யாதவ் பாஜக தாமரை சின்னத்திலும். நாம் தமிழர் கட்சி சார்பாக எழிலரசி உள்ளிட்டோர் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளனப்.
தேர்தல் களத்தில் முக்கிய கட்சிகள்
காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி பி.சிதம்பரம் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது காரைக்குடி பகுதியில் வேளாண் கல்லூரி கொண்டு வந்தது மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றியது போன்றவை இந்த தேர்தலில் அவருக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
அதிமுக: அதிமுக சார்பில் போட்டியிட்டுள்ள சேவியர் தாஸுக்கு அவர் சமூகம் சார்ந்த வாக்குகள் பெற வாய்ப்பு உள்ளதாகவும், அவர் அரசியலுக்கு புதியவர் என்றாலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் வாக்குகள் அவருக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக: பாஜக கூட்டணியிலுள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேவநாதன் யாதவ் பாஜக தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கும் கூட்டணி கட்சிகள் மற்றும் சமூகம் சார்ந்த வாக்குகள் கணிசமாக கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
வெற்றி யாருக்கு?: சிவகங்கை மக்களவைத் தொகுதியைப் பொருத்தவரையில் காங்கிரஸ் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக இத்தொகுதியில் ப.சிதம்பரம் அதிக முறை வெற்றி பெற்றிருப்பதும், அவருக்கு பிறகு அவரது மகன் கார்த்தி ப.சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளதும் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, பாஜக கூட்டணியிலுள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகியவையும் வெயிட்டான வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதால், இந்த முறை சிவகங்கை சீமையை கைப்பற்றுவது எந்தக் கட்சிக்கும் கடும் சவாலாகவே இருக்கும் என்று தெரிகிறது. இத்தொகுதியில் நிலவும் மும்முனைப் போட்டியில் வெற்றி யாருக்கு என்பது ஜுன் 4 ஆம் நாள் தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: 2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளுங்கள்...