இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது தேனி. சோழவந்தான், ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 69.87 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதாவது இத்தொகுதியில் மொத்தமுள்ள 16,22,949 வாக்காளர்களில் 11, 33,950 பேர் வாக்களித்துள்ளனர். இதுவே 2019ம் மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் மொத்தம் 75.27% வாக்குகள் பதிவாகி இருந்தன. அப்போது மொத்தமிருந்த 15,61,040 வாக்காளர்களில் 11 லட்சத்து 67 ஆயிரத்து 919 பேர் தங்களது வாக்குகளை செலுத்தி இருந்தனர்.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.டி நாராயணசாமி, திமுக சார்பில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், பாஜக கூட்டணியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பாக மதன் ஜெயபால் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
2019 தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் குமார், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் பிரதான வேட்பாளராக போட்டியிட்டனர். இவர்களில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபி ரவீந்திரநாத் குமார் 5,04,813 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ். இளங்கோவன் 4,28,120 வாக்குகளும், அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 1,44,050 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர். இதில் அதிமுகவிற்கு 42.96 சதவீதமும், திமுக கூட்டணியி்ல் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளருக்கு 36.44 சதவீதமும், அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு 12.26 சதவீதம் வாக்குகளும் விழுந்தன.
வெற்றி்க்கான காரணம்: 2019 ஆம் ஆண்டு தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓபி. ரவீந்திரநாத் குமார் வெற்றிக்கு, அவரின் தந்தை ஓ.பன்னீர்செல்வத்தின் பங்கு முக்கியமானதாக இருந்தது. மேலும் காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் செய்யாதது காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு காரணம் எனக் கூறப்பட்டது. அதேபோல் அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் தான் தோல்வி அடைந்ததற்கு தங்களுடைய கட்சி சின்னமான பரிசுப்பெட்டியை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியாதது ஒரு காரணம் என தேர்தல் முடிவுக்கு பிறகு அவரே கூறியிருந்தார்.
விஜயகாந்த் பெயரைச் சொல்லி வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்: தற்போது நடைபெற்று முடிந்துள்ள 2024 தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடும் நாராயணசாமி மக்கள் மத்தியில் பரிச்சயம் இல்லாத வேட்பாளராக இருந்த நிலையில், தேனி நாடாளுமன்றத் தொகுதியின் அதிமுக தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் பிரச்சாரம் நாராயணசாமிக்கு பெரும் உதவியாக இருந்தது. மேலும் பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் தன்னை விஜயகாந்தின் உறவினர் என்றும் விஜயகாந்த் தனது வாழ்க்கையில் நிறைய உதவிகள் செய்துள்ளார் எனவும் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி.
திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், தமிழக அமைச்சர்கள் மூர்த்தி, ஐ பெரியசாமி ஆகியோருடன் தேர்தல் நடத்தும் அலுவலகமான தேனி ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது தனது வேட்பு மனுவை மறந்து காரில் வைத்துவிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தனது உதவியாளரை அனுப்பி வேட்பு மனுவை எடுத்து வரும்வரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவர் காத்திருந்த சம்பவம் வைரலானது.
அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்தபோது தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்ட நபர்களை மீறி அதிகமான நபர்கள் வருகை தந்ததால் அவரது வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், அமமுக கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பின்னர் தினகரன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு பரிசீலனையின்போது அவர், வேட்பு மனுவை இணையத்தில் தாமதமாக பதிவேற்றம் செய்ததாகவும், அதன் காரணமாக அவரது வேட்பு மனுவை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. டிடிவியின் மனைவி அனுராதா தினகரன் ,முதல்முறையாக தேர்தல் பிரச்சாரம் செய்து, தனது கணவருக்காக பொதுமக்களிடம் வாக்கு வேட்டை நடத்தினார்.
பிரேமா என்கிற ஜெயலட்சுமி: இதற்கிடையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் பிரேமா என்கிற ஜெயலட்சுமி தேனி தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவருக்கு 'விளக்கேற்றி' சின்னம் கொடுக்கப்பட்டது. ஒரே/யொரு நாள் மட்டும் தேனி தொகுதியில் பிரச்சாரம் செய்த பிரேமா என்கிற ஜெயலட்சுமி, தான் ஜெயலலிதா மகள் என்பதால் தன்னை பிரச்சாரம் செய்யவிடாமல் தடுக்கிறார்கள் என குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இதையும் படிங்க: தேர்தல் முடிவுக்காக வெயிட்டிங்கா த.வெ.க? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சீக்ரெட் உடைத்த நிர்வாகி!