புதுச்சேரி: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில், 102 தொகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.00 மணி முதல் தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, புதுச்சேரியிலும் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரில் நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவில், முன்னாள் முதலமைச்சர் வி.நாராயணசாமி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் வாக்குரிமையைச் செலுத்த வேண்டியது அனைவரின் கடமை.
இந்தியாவிலுள்ள அனைத்து சகோதர சகோதரிகளும் தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்து, தங்களுடைய ஜனநாயகக் கடமையான வாக்குளைப் பதிவு செய்து, இந்திய சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். இந்த தேர்தல் பணநாயகத்திற்கும், மக்கள் சக்திக்குமான தேர்தல். இதுவரை மக்கள் சக்திதான் வென்றுள்ளது.
இந்த முறையும் மக்கள் சக்தி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராக வருவார். பாஜக பணத்தை வாரி இரைக்கிறது. ஆனால், மக்கள் அதை ஒரு பொருட்டாக கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால், ஊழலை எதிர்க்கின்றனர். புதுச்சேரியிலும் பணபலமா, மக்கள் பலமா என்ற நிலை உள்ளது. மக்கள் பலம் எங்கள் பக்கம் உள்ளது.
பணம் பலம் முதலமைச்சர் ரங்கசாமி, பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் ஆகியோரிடம் உள்ளது. நாங்கள் வெற்றி பெறுவோம். ராகுல்காந்தி பிரதமர் ஆனதும், நமது வேட்பாளர் வைத்திலிங்கம் அமைச்சரவையில் இடம்பெறுவார்' எனத் தெரிவித்துள்ளார். அதேபோல, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, திலாஸ் பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி பெறுவது உறுதி. என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்' என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தேர்தல் புறக்கணிப்பு.. வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள் - காரணம் என்ன? - Lok Sabha Election 2024