ராணிப்பேட்டை: தமிழகத்தின் ஏழாவது நாடாளுமன்ற தொகுதியான அரக்கோணத்தில், அண்மையில் நடைபெற்று முடிந்த 2024 தேர்தலில், இரண்டு பெண் வேட்பாளர்கள் உள்பட 26 பேர் களமிறங்கியுள்ளனர். கடந்த 2008-இல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு பின், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி, ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, சோளிங்கர், அரக்கோணம், திருத்தணி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது.
அபார வெற்றிப் பெற்ற திமுக: 2019 நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,94,929. இவற்றில் ஆண் வாக்காளர்கள் 7,31,263, பெண் வாக்காளர்கள் 7,63,587, மூன்றாம் பாலினத்தவர் 79 பேர். பதிவான வாக்குகள் 11,47,547. 76.7 சதவீதம்.
இவற்றில், திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் 6,72,190 வாக்குகளையும், அவருக்கு அடுத்ததாக பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி 3,43,234 வாக்குகளையும் பெற்றனர். சுயேச்சை வேட்பாளர் என்.ஜி.பார்த்திபன் - 66,826, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாவேந்தன் - 29,347, மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் ராஜேந்திரன் 23,771 வாக்குகளையும் பெற்றனர். திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுக வெற்றிக்கான காரணம்?: அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அமமுகவை சேர்ந்த என்.ஜி.பார்த்திபன் சுயேச்சையாக போட்டியிட்டு வாக்குகளை கணிசமாக பிரித்தார். ஜெகத்ரட்சகன் தொகுதியின் பிரதான சமூகமான வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்; தொகுதி முழுவதும் பொதுமக்களால் நன்கு அறியப்பட்டவர் என்பதும், ஏற்கெனவே இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் என்பதும் திமுகவுக்கு கூடுதல் பலமாக அமைந்தது.
அதேசமயம், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, நேரம் குறைவாக இருந்ததால் தொகுதி முழுவதும் முறையாக பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்பதும் திமுகவின் வெற்றிக்கு மற்றொரு காரணமாக கருதப்பட்டது.
அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் காங்கிரஸ் ஐந்து முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக மூன்று முறையும், அதிமுக இரண்டு முறையும், பாமக ஒரு முறையும் வெற்றிக் கண்டுள்ளன. 2004 மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற பாமக வேட்பாளரான அர.வேலு, மத்திய இரயில்வே இணை அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 தேர்தல் களத்தில் யார் யார்?: அண்மையில் நடைபெற்று முடிந்துள்ள 2024 மக்களவைத் தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் ஜெகத்ரட்சகனே வேட்பாளராக களமிறங்கி உள்ளார். அதிமுக சார்பில் அக்கட்சியின் சோளிங்கர் கிழக்கு ஒன்றியச் செயலாளரான ஏ.எல்.விஜயன், பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக பேராசிரியை அப்சியா நஸ்ரின் களத்தில் உள்ளார். இத்தேர்தலில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தமுள்ள 15,53,989 வாக்குகளில் 11,59,441 வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவு சதவீதம் 74.19.
வரிசைக்கட்டி நிற்கும் பிரச்னைகள்: அரக்கோணத்தில் ரயில் முனையம் அமைக்கப்பட வேண்டும். அரக்கோணம் - சென்னை இடையிலான மூன்றாவது, நான்காவது ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். சோளிங்கர் மலைக்கோயில் ரோப்கார் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். பாலாறு மாசடையக் காரணமாக இருக்கும் ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்திருக்கும் குரோமிய தொழிற்சாலையில் தேங்கியுள்ள குரோமியக் கழிவுகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். திருத்தணியில் இருந்து சென்னை மற்றும் ஆந்திராவுக்கு செல்ல புறவழிச்சாலை அமைக்க வேண்டும். நெசவாளர்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் ஜவுளி பூங்கா அமைத்து தர வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மேலும் காலம் தாழ்த்தாமல் வழங்கப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளிடமான அரக்கோணம் தொகுதி மக்களின் கோரிக்கை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இந்தப் பிரச்னைகள் எல்லாம் தேர்தலில் எதிரொலித்துள்ள நிலையில், இத்தொகுதியில் வெற்றியை திமுக தக்கவைத்து கொள்ளுமா, கிட்டத்தட்ட 40 சதவீதம் வன்னியர் சமூகத்தினர் உள்ள தொகுதி என்பதால், பாமக வேட்பாளர் கே.பாலு, திமுகவுக்கு கடும் சவாலாக இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் திமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி உள்ள இத்தொகுதியில் சமூக ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை அதிமுக குறிப்பிடத்தக்க அளவு பிரிப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தொகுதிகளில் வரிசைக்கட்டி நிற்கும் பிரச்னைகளுக்கு தொகுதியின் சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் எந்தளவு தீர்வு கண்டுள்ளார் என்பதும், பாஜக - பாமக கூட்டணி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் இத்தேர்தலின் முடிவை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது. ஒப்பீட்டளவில் அதிமுகவைவிட பாமக வலுவாக உள்ள இத்தொகுதியில், 2019 இல் பெற்ற வெற்றியைப் போல, திமுக மீண்டும் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கான விடை ஜுன் 4-ம் தேதி தெரிந்துவிடும்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024 குறித்து மேலதிக தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்