சென்னை: இந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முக்கியமான கட்சிகள் இந்த தேர்தலில் பல தொகுதிகளில் தங்கள் டெபாசிட்டை இழந்துள்ளன.
அதிமுக டெபாசிட் இழந்த தொகுதிகள்: தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அதிமுக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பதுடன் 8 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது. அதேசமயம்,அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுடன் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், பல தொகுதிகளில் அதிமுக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஆனால் வெற்றி பெற முடியாத நிலையில், தென்சென்னை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் , தேனி தொகுதியில் நாராயணசாமி , ராமநாதபுரம் தொகுதியில் ஜெயபெருமாள், தூத்துக்குடி தொகுதியில் சிவசாமி வேலுமணி , திருநெல்வேலி தொகுதியில் ஜான்சி ராணி , வேலூர் தொகுதியில் எஸ்.பசுபதி, கன்னியாகுமரி தொகுதியில் பசிலியன் நாசரெத் , புதுச்சேரி தொகுதியில் தமிழ்வேந்தன் ஆகியோர் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்த தொகுதிகள்: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகை, திருச்சி ஆகிய 6 தொகுதிகளில் 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது. ஆனால் எந்த தொகுதிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை இல்லாததால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்துள்ளது.
பாஜக டெபாசிட் இழந்த தொகுதிகள்: தேசிய அளவில் முன்னிலையில் இருக்க கூடிய பாரதிய ஜனதா கட்சியானது தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து இந்த நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. ஆனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. சில தொகுதிகளில் இந்த பாஜக கூட்டணியானது இரண்டாம் இடத்தையும் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
ஆனால் திருவள்ளூர் தொகுதியில் பொன்.வி.பாலகணபதி, திருவண்ணாமலை தொகுதியில் அஸ்வத்தாமன், வட சென்னை பால் கனகராஜ் , கரூர் தொகுதியில் வி.வி.செந்தில் நாதன் , விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் , நாமக்கல் தொகுதியில் கே.பி.ராமலிங்கம் , சிதம்பரம் தொகுதியில் கார்த்தியாயினி , திருப்பூர் தொகுதியில் எ.பி.முருகானந்தம் , நாகப்பட்டினம் தொகுதியில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் , தஞ்சாவூர் தொகுதியில் முருகானந்தம் ஆகியோர் தங்கள் தொகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையை பெறாததால் டெபாசிட்டை இழந்துள்ளனர். மேலும் பாஜகவோடு கூட்டணியில் இருந்த பாமக 6 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும், ஐஜேகே கட்சி 1 தொகுதிகளிலும், அமமுக 1 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்துள்ளன.
இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை! - காமராஜர்,கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா செய்யாத சாதனையை படைத்த ஸ்டாலின்!