"தவெக மாநாட்டுக்கு லட்சகணக்கான தொண்டர்கள் வருகின்றனர்"-விஜய் மாநாடு குறித்து உள்ளூர் மக்கள் சொல்வது என்ன? - TVK CONFERENCE
நடிகர் விஜயின் தவெக மாநாட்டுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத வகையில் அதிகம் பேர் மாநாட்டுக்கு வருகின்றனர் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.


Published : Oct 27, 2024, 1:22 PM IST
சென்னை: எம்ஜிஆர் அரசியல் கட்சி மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்களை விடவும் இப்போது தவெக மாநாட்டிற்கு அதிக அளவு தொண்டர்கள் வருவதாக விக்கிரவாண்டி பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடத்தும் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் மிகவும் பிரமாண்டமான முறையில் இன்று நடைபெற உள்ளது. விஜய்யின் முதல் மாநாடு என்பதாலும் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையிலும் ஏராளமான கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் வி.சாலை நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர்.
நேற்றிரவு முதலே ஆயிரக்கணக்கானோர் மாநாடு திடலுக்கு திரண்டு வருகின்றனர். இந்த நிலையில் இம்மாநாடு குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடுக்கு பேட்டியளித்த அப்பகுதியில் வசித்து வரும் சுந்தரம், "இதுபோல தொண்டர்கள் கூட்டத்தை நான் இதுவரை கண்டதில்லை. நான் பல அரசியல் கூட்டங்களுக்கு சென்றுள்ளேன். நான் அதிமுகவில் தொண்டராக இருந்தேன். அவருக்கே இத்தனை கூட்டம் வந்ததில்லை. சென்னை மாம்பலத்தில் நடந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அங்கு இல்லாத கூட்டத்தை இங்கு நான் பார்க்கிறேன்.
இதையும் படிங்க : தவெக முதல் மாநில மாநாடு: மாநாட்டு பந்தலில் குவிந்து வரும் தொண்டர்கள்
புதுமுகங்கள் வந்தால் அரசியலுக்கு வந்தால் நாட்டிற்கு நல்லது என்ற அடிப்படையில் தொண்டர்கள் கூடுகின்றனர். சினிமா நடிகர் என்பதற்காக மட்டும் அவர்கள் வந்ததாகத் தெரியவில்லை. 2026ல் விஜய் முதல்வராக வருவார் என்று நான் நம்புகிறேன். மாநாட்டுக்கு பூமி பூஜை போட்ட நாள் முதலே இங்கு கூட்டம் அலைமோதுகிறது. மாநாடு ஏற்பாடுகள் மேற்கொள்வதற்காக பூமி பூஜை போடப்பட்டபோது அதிகாலை 3 மணிக்கே 2000 வாகனங்களில் தொண்டர்கள் வந்தனர். பூமி பூஜைக்கே இந்த அளவுக்கு தொண்டர்கள் வருவார்களா என்று ஆச்சர்யம் அடைந்தேன்,"என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்