திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்ட பயணிகளை மீட்க உதவி செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578) இன்றிரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில், 6 பெட்டிகள் தரம் புரண்டதில் இரு ஏசி பெட்டிகள் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த ரயிலில் பயணித்தோர் பெரும்பாலானோர் வடமாநிலத்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளன. இந்த விபத்தில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் கொண்ட குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சென்னை சென்ட்ரலில் இருந்தும் சென்ற மருத்துவ வேன் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதிய பாக்மதி எக்ஸ்பிரஸ்..
விபத்து நடந்த இடத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் நாசர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே விபத்து நடந்ததை கேள்விப்பட்ட கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று இரவு பயணிகளை மீட்டு அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் ஆம்புலன்ஸ்களில் காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்வதற்கும் உதவி செய்தனர்.
குறிப்பாக கவரைப்பேட்டையை சேர்ந்த ஜீவா என்ற சிறுவர், தாம் விபத்து நடந்த இடத்தில் இருந்து பயணிகளை திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றதாக கூறினார். இன்னொரு சிறுவர் மணிகண்டன், விபத்து நடந்தபோது வீட்டில் இருந்ததாகவும், பயங்கர சத்தம் கேட்டதை அடுத்து விபத்து நடந்த பகுதிக்கு வந்ததாகவும் கூறினார். காயம் அடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லவும் அவர் உதவியிருக்கிறார்.