சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்.19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும்.வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 -ம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு மார்ச் 20ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதிவரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி கடந்த வாரம் தமிழகம் முழுவதும் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. ஆனால் வேட்பு மனு தொடங்கிய முதல் நாள் பலரும் மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. முதல் நாளில் 22 பேர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்து இருந்த நிலையில் அதற்கு அடுத்த நாள் (மார்ச் 21) 9 பேர், மார்ச் 22ஆம் தேதி 47 என முதல் மூன்று நாட்களில் 78 வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.
சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை தினம் என்பதால் மனு தாக்கல் நடைபெறவில்லை. இந்தநிலையில் நேற்று(மார்ச் 25) ஒரே நாளில் மட்டும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 405 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் ஆணையம் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாகச் சேலம் தொகுதியில் 19, தென்சென்னை, நாமக்கல் ஆகிய தொகுதிகளில் 17, கிருஷ்ணகிரி(16), தருமபுரி, ஆரணி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய தொகுதிகளில் 15 வேட்பாளர்கள் வேட்பு மனு தக்கல் செய்துள்ளனர்.
நேற்று பங்குனி உத்திரம் மற்றும் முகூர்த்தம் நாள் என்பதால் நல்ல நேரம் பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் நேற்றுவரை 483 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நாளையுடன்(மார்ச் 27) வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறவுள்ளது. இதனையடுத்து மார்ச் 28 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். மேலும் வேட்பு மனுக்களை திரும்பப்பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தூத்துக்குடி மார்க்கெட்டில் கண்ணீருடன் வந்த மூதாட்டிக்கு ரூ.2000 கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.. நடந்தது என்ன? - MK Stalin