கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான தொண்டாமுத்தூர், நரசிபுரம், மருதமலை மற்றும் பெரிய தடாகம் ஆகிய பகுதிகளில் அதிக அளவு யானைகளை நடமாட்டம் காணப்படுகிறது. குறிப்பாக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.
தற்போது மழை பெய்து வனப்பகுதி முழுவதும் பசுமை திரும்பிய நிலையில் கூட யானைகள் அங்குச் செல்லாமல் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வீடுகளை உடைத்து அரிசி, புண்ணாக்கு உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு தொண்டாமுத்தூர் அடுத்த நரைச்சிபுரம் கிராமத்திற்குள் ஒன்றை காட்டு யானை புகுந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள், இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: கூடலூர் டூ அமெரிக்கா பயணித்த யானைகள்..பழங்குடியினர் கைவண்ணத்துக்கு உலகளவில் கூடும் மவுசு!
கூலி தொழிலாளி பலி: அப்போது குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானை, தர்மராஜா வீதியில் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளி சந்திரன் என்பவரை தாக்கி தந்ததால் குத்தி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானையை விரட்டி சந்திரனின் உடலை மீட்டு ஆலந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சந்திரன் உடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. யானை தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடரும் உயிர்பலி:கடந்த ஒரு மாதத்தில் அதே பகுதியில் யானை தாக்கி மூன்று பேர் உயிரிழதுள்ளனர். இதனால் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கே அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றன. எனவே யானைகள் ஊருக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டு என கோரிக்கை விடுத்துவருகின்றனர்.