சென்னை: சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு இருப்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. இது தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்படுகிறார்; மதுரையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் மாநில அமைச்சர் குடியிருக்கும் சாலையிலேயே வெட்டிக் கொலை செய்யப்படுகிறார்; காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
கள்ளக்குறிச்சியில் 70க்கும் மேற்பட்டவர்கள் கள்ளச்சாராயத்தினால் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இன்று ஒட்டுமொத்தமாக செயலிழந்த அரசாங்கமாக உள்ளது. சட்ட ஒழுங்கு பற்றி கவலைப்படாததால் தான் ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் நடந்துள்ளது" என்று தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்.
அதன் தொடர்ச்சியாக மின் கட்டண உயர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தமிழ்நாட்டு மக்களுக்கு மின்சார கட்டணம் உயர்வு பெரிய பேரிடியாக உள்ளது. திருப்பூர், ஓசூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் கோவை போன்ற நகரங்களில் மின்சார கட்டணத்தினால் பல தொழில் நிறுவனங்கள் தற்போது முடங்கிய நிலையில் உள்ளது.
இதுபோன்று தொழில் நிறுவனங்கள் நடத்த முடியாத நிலை நீடித்தால் தொழில் வளம் பாதிக்கப்படும். ஏழை, எளிய மக்கள் மீது 3வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாது, சொத்து வரி, நில வரி, பத்திரப் பதிவு வரி போன்ற வரிகளை உயர்த்தி மக்கள் மீது சுமையை அரசு ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே, மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று பதிலளித்தார்.
அதனை அடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பொறுத்தவரையில் கட்சிகளைப் பார்க்கக் கூடாது. யார் குற்றவாளியோ அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “இட ஒதுக்கீடு கோரி தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம்..” ராமதாஸ் எச்சரிக்கை!