ஈரோடு: நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 2-ஆம் இடம் பிடித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நேற்று பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புன்செய் புளியம்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது மக்களுக்கு பேரிடியாக உள்ளதாகவும், மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த ஓராண்டுக்கு முன் மின் கட்டணம் உயர்ந்தபோதே திருப்பூர், கோவை தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட சூழலில் தற்போது மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, அதிலிருந்து மீளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக மின் கட்டணம் உயர்வைத் திரும்ப பெற வேண்டும் என்றும் இதனால் தொழில்துறை அதிக அளவில் பாதிப்படைவதோடு, மேலும் மக்களின் வளர்ச்சியும் பாதிப்படையும் எனக் கூறினார். இதனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சோலார் மின் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும், சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் படுகொலை, மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி அமைச்சர் வீட்டின் அருகே கொலைச்செய்யப்பட்ட சம்பவம், திருநெல்வேலியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை சம்பவம் ஆகியவை தொடர்ந்து நடைபெறுவதாகவும், இன்னும் அதற்கான குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திக் கிட்டத்தட்ட 70 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று தெரிவித்த அவர், தொடர்ந்து தமிழ்நாடு அரசாங்கம் செயலற்ற அரசாங்கமாக உள்ளது எனவும், காவல்துறையைக் கையில் வைத்திருக்கிற முதலமைச்சரும் செயலற்ற முதலமைச்சராக உள்ளதாகவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும், தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவது சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதையை காட்டுவதாக காட்டமாக விமர்சித்துள்ள அமைச்சர் எல்.முருகன், காவிரி நதிநீர் ஆணையம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும் கர்நாடகா அரசு கொடுக்க தயங்கிய நிலையில், அந்த தண்ணீரை மழையின் மூலமாக இயற்கை நமக்குக் கொடுத்துள்ளது என்றும், மேலும் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் தமிழகத்திற்குத் தரவேண்டிய நீர் அளவை உடனடியாக கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “மின் கட்டண உயர்வை திரும்பப் பெற காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது” - செல்வப்பெருந்தகை!