ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணை குன்றி மலையடிவாரத்தில் சுமார் 40 ஆண்டுக்கு முன்பு 42 அடி உயரத்தில் கட்டப்பட்டது. குன்றி, விளாங்கோம்பை, மல்லியதுர்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைக் காலங்களில் உருவாகும் 10க்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக மழைநீர் இந்த அணையை வந்தடைகிறது.
மேலும் இந்த குண்டேரிப்பள்ளம் அணையின் மூலமாக வாணிப்புத்தூர், குண்டேரிப்பள்ளம், கொங்கர்பாளையம், வினோபா நகர் மற்றும் மோதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
அந்தவகையில், கடந்த மாதம் அணையில் இருந்து பாசனத்திற்காக இரு வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து.
இதையும் படிங்க: ஆவடி ரயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள்!
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளைச் சுற்றிலும் பெய்த கனமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த நீர்பிடிப்பு உயரமான 42 அடியை எட்டியது.
இத்தகைய சூழ்நிலையில், குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியதைத் தொடர்ந்து அணையில் இருந்து 250 கன அடி உபரி நீர் வெளியேறப்பட்டுவருகிறது. இதனால் அணையின் நீர் வழிப் பாதையில் உள்ள கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், வினோபாநகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்துவரும் மக்களை பொதுப்பணித்துறையினர் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்