திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. மேலும், 3 மற்றும் 4 ஆகிய அணு உலைகளுக்கான 70 சதவீத பணிகள் நடந்து முடிந்துள்ளன. 5 மற்றும் 6வது அணு உலைக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடைய இன்று (மே 13) காலை 5.05 மணியளவில் 1000 மெகாவாட் கொண்ட இரண்டாவது அணு உலை எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிவடைய 60 நாட்கள் ஆகும் என அணுமின் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, எரிபொருள் நிரப்பும் பணிக்காக கடந்த நவம்பர் மாதம் ரஷ்யாவில் இருந்து விமானம் மூலம் யுரேனியம் எரிக்கோல்கள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என அணுஉலை நிர்வாகம் தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பராமரிப்பு பணியின் காரணமாக தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய 562 மெகாவாட் மின் உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முதலாவது அணுஉலையானது 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது.
ஏற்கனவே தமிழகத்தின் ஒரு நாள் மின் தேவை 21,000 மெகாவாட்டிற்கும் அதிகமாகத் தேவைப்படும் சூழ்நிலையில் கூடங்குளத்தில் இருந்து கிடைக்க வேண்டிய 562 மெகாவாட் மின் உற்பத்தியும் பராமரிப்பு பணி காரணமாக பாதிக்கப்படுவதால் மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: "எனது கணவரை மீட்டு தாருங்கள்" என யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி கோரிக்கை!