கோயம்புத்தூர்: திமுக செய்தி தொடர்பு துணைச் செயலாளரான கோவை செல்வராஜ், இன்று (மார்ச் 7) கோவை பால் கம்பெனி பகுதியில் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "தமிழகத்தில் மழை வெள்ளத்தால் சுமார் 32 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டது. அப்போதெல்லாம் தமிழகம் வராத பிரதமர், தேர்தலுக்காக 5 முறை வந்துள்ளார்.
பிரதமராக மோடி பதவியேற்றபோது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பயிர்க்காப்பீடு, வீடு கட்டும் திட்டத்திற்கு அதிக நிதியை மாநில அரசே தருகிறது. இப்படியிருக்க, எப்படி அண்ணாமலை சொல்வது போல மோடி பெயரை வைக்க முடியும்? பாஜகவிற்கும், இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம்? மதத்தின் பெயர், கோயிலின் பெயரைச் சொன்னால்தான் வாக்களிப்பார்கள் என்பதால் மதத்தைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். மதத்திற்காக கட்சி நடத்தும் ஒரே கட்சி பாஜகதான். இந்து மக்களை திமுக அரசு புறக்கணிக்கவில்லை.
இந்து மக்களுக்கு மோடி ஒன்றும் அப்பாவோ, அம்மாவோ, சொந்தமோ அல்ல. அந்த கட்சி இந்துக்கள் பெயரைச் சொன்னால் ஓட்டு போடுவார்கள் என்று நாடகமாடுகின்றனர். மதச்சார்பற்றது நம்முடைய நாடு. இங்கு 17 மதங்கள் இருக்கின்றன. பிரதமர் என்பவர். அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். அதைத் தவிர்த்து, ஒரு மதத்திற்காகச் செயல்படுவதாக பொய்யான வாக்குறுதி கொடுக்கிற மோடி ஆட்சி முடிய 60 நாட்கள்தான் இருக்கிறது.
ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு முறையாக பங்கிட்டு தருவதில்லை. இப்படி மோடியின் ஆட்சியில் தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு நிதி தராததால்தான் மக்கள் நலத்திட்டங்கள் செய்ய பணம் பற்றாக்குறையாக உள்ளது. மழை வெள்ள பாதிப்பிற்கு ஒரு பைசாகூட தராத மத்திய அரசை, தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். அண்ணாமலை எப்போதும் பொய்தான் பேசுகிறார். அவருக்கு திமுக பற்றி பேச எந்தவொரு தகுதியும் இல்லை" என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "அதிமுக ஆட்சியில் அமைச்சர், காவல் துறை அதிகாரிகள் மீதே குட்கா வழக்கில் விசாரணை நடைபெற்றது. ஆட்சியில் இருந்தபோது போதைப்பொருளை தடுக்கத் தவறிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை விமர்சிக்கத் தகுதியில்லாதவர். போதைப்பொருள் கடத்தலுக்கும், முதல்வருக்கும் என்ன சம்பந்தம்? குட்கா விற்க டிஜிபி பணம் வாங்கியது அதிமுக ஆட்சியில்தான் நடந்தது. அதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லட்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: காழ்ப்புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக திமுக திகழ்கிறது.. பிரதமரின் தமிழக வருகை குறித்து ஜி.கே.வாசன் பேச்சு!