ஈரோடு: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சாா்பில், கொங்கு மண்டல எழுச்சி மாநாடு, கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில், பெருந்துறை அருகே நேற்று (பிப்.4) நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர். மாநாட்டுக் கொடியினை கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஏற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
இம்மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரையை, அமைச்சர் மா.சுப்பிரமணியம் வாசித்தார். அதில், “அரசியல் இயக்கத்தினை தொடங்குவது எளிது ஆனால், தொடர்ந்து நடத்துவது கடினம். அந்தநிலையில் கொமதேக, கொங்கு பகுதி வளர்ச்சிக்காக இல்லாமல், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கவனத்தைத் திசை திருப்ப பல்வேறு முயற்சிகள் நடக்கலாம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முன்னெடுப்போம், 40க்கு 40 இலக்கை பெற போராடுவோம். சமூகநீதி கொள்கை வழிப் பயணத்தில் துணை நிற்கும் கொமதேக மாநாடு இலக்கை அடைய வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
தீர்மானங்கள்: தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாகத் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். தொழிற்கல்வியை ஊக்கப்படுத்தி, பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும். மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தைத் தமிழகம் முழுவதும் செயல்படுத்த வேண்டும். பிசிஆர் வழக்குகளில் பொய் வழக்குப் போடுவதைக் கலைய வேண்டும். கொடுமணல் அகழ்வாராய்ச்சி பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பன உள்பட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசுகையில், “ஒரு கட்சியுடன் கூட்டணி என்றால் கூட்டணியில் உள்ள கட்சிகளின் கொள்கைகளை எல்லாம் நாம் ஏற்றுக் கொண்டோம் என்று அா்த்தம் கிடையாது. அதேபோல நம் கட்சியின் கொள்கைகளைக் கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. கூட்டணியில் இருந்தாலும் கொள்கைகளை விட்டுத்தர மாட்டோம்.
இன்றைக்கு வேளாண் தொழில் மிகவும் மோசமடைந்து விட்டது. மரவள்ளி, கரும்பு போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் ஜவுளி, லாரி, ரிக் போன்ற அனைத்து தொழில்களும் மோசமடைந்துவிட்டது. கொங்கு மண்டலத்தில் ஜவுளி தொழில் நசிவடைந்ததற்கு காரணம் ஒன்றிய அரசின் தவறான ஜவுளி கொள்கைதான்.
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. பெருந்துறை பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கொங்கு மண்டலத்தில் புற்றுநோய் தாக்கத்தைக் குறைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காகப் பிரிக்க வேண்டும்” என்று கூறினார்.
இம்மாநாட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நாமக்கல் எம்பி சின்ராஜ், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஸ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆளுநர், முதலமைச்சர் பிரச்சனைக்கு தீர்வு சொன்ன இல.கணேசன்!