திண்டுக்கல்: தமிழகத்தில் கோடை வெயில் அனைவரையும் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெயிலில் இருந்து தப்பிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வருகின்றனர். இந்நிலையில், ஒரு நாளைக்கு சுமார் 20 ஆயிரம் வாகனங்கள் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்குச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் வரும் 7ஆம் தேதி முதல் கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, கொடைக்கானல் மலைப்பகுதியில் வியாபாரம் மர்றும் ஹோட்டல் நடத்துபவர்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஹோட்டல் ரிசார்ட் உரிமையாளர் சார்பில், தனியார் ஹோட்டலில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
அப்போது அவர்கள் செய்தியாளர் சந்தித்து பேசுகையில், குறைவான அளவில் இ-பாஸ் கொடுத்தால் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி வைத்திருக்கும் நாங்கள் அனைவரும் பெரிதும் பாதிப்பு அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. சீசன் வருமானத்தில் தான் நாங்கள் வாங்கிய கல்விக்கடன், வாகணக்கடன் உள்ளிட்ட பிற அனைத்து கடன்களையும் அடைக்க முடியும்.
எனவே, தமிழக முதலமைச்சர் இதில் தலையிட்டு இந்த வழக்கை மேல் முறையீடு செய்ய வேண்டும். கார்பார்க்கிங் வசதியை அதிகப்படுத்தி போக்குவரத்து காவலர்களை சீசனில் அதிகப்படுத்தி போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட அமைச்சர்கள் முன்வர வேண்டும்.
கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் கருதி நீதியரசர்கள் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். வரும் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து இ-பாஸ் ரத்து செய்ய மனு கொடுக்க உள்ளோம். இதில் சுமூக உடன்பாடு கிடைக்கவில்லை எனில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மாட்டோம் அதே போல உணவும் வழங்க மாட்டோம்” என தெரிவித்துள்ளனர்.