கோயம்புத்தூர்: கிசான் மஸ்தூர் மோர்ச்சா என்ற அமைப்பு, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் சார்பில், ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏப்ரல் 7ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் அறிவித்திருந்தனர்.
பிரதமர் மோடி மற்றும் ஹரியானா மாநில முதலமைச்சர் ஆகியோரின் உருவ பொம்மைகள், இன்று நாடு முழுவதும் இந்த அமைப்பினரால் எரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்பின் தலைவர் சர்வன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கோவையில் உள்ளனர். விவசாயிகள் போராட்டத்தின் பொழுது, துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழந்த விவசாயியின் அஸ்தியை எடுத்துக்கொண்டு நாடு முழுவதும் சுற்றி வரும் இந்த அமைப்பினர், தற்பொழுது கோவையில் இருக்கின்றனர்.
இந்நிலையில், கோவையில் கிசான் மஸ்தூர் மோர்ச்சா அமைப்பின் சார்பில், இன்று மாலை பிரதமர் மோடி மற்றும் ஹரியானா முதலமைச்சர் ஆகியோரது உருவ பொம்மைகளை எரிக்கத் திட்டமிட்டிருந்தனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர், அவர்கள் தங்கியிருந்த லாட்ஜ்-க்குச் சென்று அவர்களை கைது செய்ய முயன்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் போலீசார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, வடமாநில விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து கிசான் மஸ்தூர் மோட்சா விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சர்வன் சிங் உள்ளிட்ட வடமாநில விவசாயிகள் சங்கத் தலைவர்கள் 10 பேரை கோவை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது பா.ஜ.கவிற்கு எதிராக விவசாயிகள் முழக்கம் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: “அண்ணாமலை இதற்கு பதில் அளிக்க வேண்டும்”.. ரூ.4 கோடி பறிமுதல் விவகாரத்தில் சீமான் பேச்சு! - Lok Sabha Election 2024