நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து விலகிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு! - Lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
Khushboo withdrew from campaign: பிரதமர் தொடர்ந்து 3வது முறையாகப் பதவியேற்பதையும், உரத்த குரலில் ஆரவாரம் செய்வதையும் நான் எங்கிருந்தாலும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு ஜெ.பி.நட்டாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Published : Apr 7, 2024, 4:50 PM IST
சென்னை: உடல்நிலை காரணமாகத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், தன்னால் ஈடுபட முடியாது என பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவிற்கு தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு இன்று (ஏப்.07) கடிதம் எழுதி உள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்.19 ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களிடம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு வேலூர், சென்னை உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து வந்தார்.
இந்த நிலையில், அவர் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு இன்று (ஏப்.07) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “கடந்த 2019ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் எலும்பு முறிவு காரணமாக ஏற்கனவே சிகிச்சை மேற்கொண்டிருந்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பிரச்சனையுடன் இருந்து வருகின்றேன். இருப்பினும் இந்த பிரச்சனையுடன் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தேன்.
ஆனால், எனது உடல்நிலை ஒத்துழைக்காமல் மிகவும் மோசமானது. அதனைத் தொடர்ந்து, எனது மருத்துவர்கள் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். எலும்பு முறிவு பிரச்சனையால் என்னால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர முடியாத நிலையும், நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே எனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, என்னால் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கனத்த இதயத்துடன்தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆனாலும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பாஜகவின் கொள்கை மற்றும் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். பிரதமர் தொடர்ந்து 3வது முறையாகப் பதவியேற்பதையும், உரத்த குரலில் ஆரவாரம் செய்வதையும் நான் எங்கிருந்தாலும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்”, என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பான திமுக பிரச்சாரம்; ராமதாஸ் - ஈபிஎஸ் கூறுவது என்ன? - Lok Sabha Election 2024