சென்னை: மலையாளத் திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கையின் மூலம் வெடித்துள்ள பாலியல் புகார்கள் குறித்து நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் “திரைத்துறையில் உள்ள மீடூ (Me Too) பிரச்னை வருத்தமளிக்கிறது.
இந்தச் சூழலில் வெளிப்படையாக பேசிய பெண்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். ஹேமா கமிட்டி அறிக்கை முழுமையாக குற்றவாளிகளை வெளிக்கொண்டு வருமா என்பது கேள்வி தான். ஒரு துறையில் பெண்கள் முன்னேற பாலியல் ரீதியாக சமரசம் செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். இந்த விவகாரத்தில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர்.
என்னுடைய 24 மற்றும் 21 வயது மகள்களுடன் இந்த பிரச்சனை குறித்து விவாதித்த போது, அவர்களுக்கு உள்ள புரிதல்களைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தேன். அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் நிலை குறித்து புரிந்து கொண்டு அவர்கள் பக்கம் நிற்கிறார்கள். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தக் கூடாது. இந்த பிரச்னையில் பெண்கள் ஏன் முன்பே பேசவில்லை என கேட்பதற்கு முன்பு அவர்கள் உள்ள சூழல் குறித்து யோசிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை காது கொடுத்து கேட்க வேண்டும். ஒரு பெண்ணாகவும், தாயாகவும் இருப்பவர்களுக்கு இது போன்ற பாலியல் வன்முறை உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அனைத்து ஆண்களும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிற்க வேண்டும் என மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். எனது தந்தை எனக்கு அளித்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேச எனக்கு ஏன் இவ்வளவு தாமதம் என கேள்வி எழுப்புகின்றனர்.
நான் முன்கூட்டியே பேசியிருக்க வேண்டும் என ஒப்புக் கொள்கிறேன். ஆனால், என்னுடைய கரியரை வளர்ப்பதற்காக நான் அமைதியாக இருக்கவில்லை. பல பெண்களுக்கு குடும்பத்தின் ஆதரவு இருப்பதில்லை. பெண்கள் சிறிய ஊர்களிலிருந்து கனவுகளோடு வருகின்றனர். பின்னர் அவர்களின் கனவு சிதைக்கப்படுகிறது. பெண்கள் தைரியமாக பேச வேண்டும். No என்றால் No தான். பெண்கள் தங்கள் கண்ணியம் மற்றும் மரியாதையை சமரசம் செய்யக் கூடாது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பெண்களுடனும் ஒரு தாயாகவும், பெண்ணாகவும் துணை நிற்கிறேன்" என கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: வசூல்ராஜா MBBS நடிகர் மீது பாலியல் புகார்.. திணறும் மலையாளத் திரையுலகம்! - Hema committee report