சென்னை: கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டு வபரும் நிவாரணப் பணிகளுக்கென முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், 'கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது இந்த இயற்கை பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு தமது வருதத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டில் இருந்து இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான டாக்டர் கீ.சு. சமீரன், ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்' என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு; 1000 பேரின் நிலை என்ன? மீட்புப் பணிகள் தீவிரம்!