வேலூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் பசுபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அதிமுகவின் சார்பில் வேட்பாளர் அறிமுக விழா வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய கே.சி.வீரமணி, "கடந்த தேர்தலில் நம்மோடு இருந்தவர், இன்று எதிர் தரப்பில் போட்டியிட சென்றுவிட்டு நம்மை துரோகி எனக் கூறுகிறார். அதிமுகவினர் முதுகில் குத்திவிட்டதாக பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். மேலும், குறிப்பிட்ட சமூகத்தை முன்னிறுத்தி வெற்றி பெற நினைக்கிறார் என பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை கடுமையாக தாக்கி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'திமுக அரசின் அவலங்களை மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் முன்னிறுத்தி தான் தேர்தல் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
இதையு படிங்க: ஆளுநர், எம்.எல்.ஏவிற்கு பதிலாக, சாதாரண தொண்டனை நிறுத்திக் காண்பியுங்கள் - அண்ணாமலைக்கு அதிமுக வேட்பாளர் சவால்..
அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் விட்டு அழும் பாச்சா எல்லாம் இனி பலிக்காது. மக்கள் தெளிவாகிவிட்டனர். கடந்த முறையை சொற்ப வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், இந்த தேர்தலில் மக்கள் தெளிவாக உள்ளதால் அதிமுகவின் வெற்றி உறுதி' என நம்பிக்கை தெரிவித்தார்.
அதன் பின்னர், அதிமுக பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, 'கடந்த காலங்களில் தங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள் என்பதற்காக தமிழகத்தில் பாஜகவை கொண்டு வந்ததே திமுக தான். ஒருவேளை பாஜக மத்தியில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டால், அவர்களுக்கு முதலில் ஆதரவு அளிப்பது திமுகவாகத் தான் இருக்கும்" எனப் பதிலளித்தார்.
கடந்த தேர்தல்களில் அதிமுக கடுமையாக போட்டியிட்ட கட்சி. 2014 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு மாபெரும் வெற்றி கண்டது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, கூட்டணி வைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அந்தவகையில் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் பணியாற்றி வருகிறோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளராக ஜான்சி ராணி அறிவிப்பு.. சிம்லா முத்துச்சோழன் மாற்றப்பட்டதன் பின்னணி என்ன?