தேனி: தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் சுமார் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்தது, ஸ்ரீ மது ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயம். போடிநாயக்கனூர் நகரின் மையப்பகுதியில் வள்ளுவர் சிலை பின்புறம் அமைந்த இந்த திருக்கோயிலில் 'பெரிய கும்பிடு திருவிழா' 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த வைபவத்தில் சௌடேஸ்வரி அம்மனை ஆற்றங்கரையிலிருந்து உருவேற்றி ஆலயத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நூறாண்டுகளுக்கும் மேல் தொடரும் பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட குதிரையில், ஆலயத்தின் முக்கிய வழிபாட்டு பொருளாக கருதப்படும் அம்மனின் கத்தியை குதிரையில் வைத்து கொட்டகுடி ஆற்றில் இருந்து சுமார் 1 1/2 கிலோ மீட்டர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி மேளதாளங்கள், செண்டை மேளம், உருமி மேளம் முழங்க உடலில் கத்தி போட்டு அம்மனை வேண்டி அழைத்து வழிபட்டனர். இதில், அம்மன் அருள் இறங்கிய இரு குழந்தைகள் பிரார்த்தனையிட்டு வேண்டி அம்மனை வருந்தி அழைத்து காட்சி பக்தர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து தங்கள் உடம்பில் கத்திபோட்டு ஆடிய படியே ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் புறப்பட்ட சூழலில் மழை பெய்த நிலையிலும் பக்தர்கள் நனைத்தபடியே ஆடிய படி வந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், குதிரையின் மேல் கத்தி வைத்துக்கொண்டு ஆலய வளாகத்திற்கு நுழைந்து பாரம்பரிய முறைப்படி பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். அதன்படி, குதிரை ஆலயத்திற்குள் நுழையும் போது பெண்களுக்கு அனுமதியில்லை. ஆண்கள் மட்டும் இந்த பூஜையில் பங்கேற்கப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகனின் காதணி விழாவில், காங்கேயம் மாடுகளை பாதுகாக்க கண்காட்சி நடத்திய ஐடி உழியர்! - Kangeyam Cattle Exhibition