சென்னை: விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற காசிமேடு மீனவர்கள் வலையில் ஏதோ பெரிய பொருள் சிக்கியதை உணர்ந்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், வலையை வெளியே எடுத்துப் பார்க்கும்போது, உடைந்த ராக்கெட் லாஞ்சரின் பாகம் கிடைத்துள்ளது.
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த தினேஷ்குமாருக்குச் சொந்தமான விசைப்படகில், நவம்பர் 5ஆம் தேதியன்று படகு ஓட்டுநர் வெங்கட்ராமன் தலைமையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கடலில் மீன்களுக்காக வலைவீசிய போது சுமார் 500 கிலோ எடையுள்ள ராக்கெட் லாஞ்சர் பாகம் வலையில் சிக்கியுள்ளது. ராக்கெட் லாஞ்சர் சிக்கியதை அடுத்து, மீனவர்கள் தங்கள் படகை உடனடியாக கரைக்குச் செலுத்தினர். அங்கு, ராக்கெட் ராஞ்சர் சிக்கியது தொடர்பாக காசிமேடு மீன்பிடி துறைமுக காவல்துறையினருக்கும், மீன்வளத்துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
ராக்கெட் லாஞ்சர் கரைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், மீன்வளத்துறை அலுவலர்கள் அதனை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காசிமேடு மீன்பிடி துறைமுக காவல்துறையினரும் மீட்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது முதல் முறை அல்ல!
நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து சபரிநாதன் என்பவருக்குச் சொந்தமான படகில், அதே பகுதியை சேர்ந்த நான்கு மீனவர்கள் 2021ஆம் ஆண்டு மே மாதம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது வேதாரண்யத்திற்கு கிழக்கே சுமார் 8 நாட்டிக்கல் (15 கி.மீ) மைல் தூரத்தில் கடலில் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, வலையில் ஒரு பெரிய இரும்பு பொருள் சிக்கியது. இதுகுறித்து மீனவர்கள் வேளாங்கண்ணி கடலோரக் காவல் படைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க |
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து, மீனவர் வலையில் சிக்கிய இரும்பு பொருளை மீட்டு விசாரித்ததில், அது ராக்கெட் லாஞ்சர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஏழு பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர் குழுவினர் மே 11, 2021 அன்று வேளாங்கண்ணிக்கு வந்தனர்.
பின்னர் ராக்கெட் லாஞ்சரை பார்வையிட்ட அவர்கள், அதை வெடிக்கச் செய்யும் முடிவை எடுத்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் ராக்கெட் லாஞ்சரை கடற்கரைக்குக் கொண்டு சென்று, அங்கு பள்ளம் தோண்டி, அதற்குள் ராக்கெட் லாஞ்சரை வைத்து வெடிக்கச் செய்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.