கன்னியாகுமரி: நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற சுஜி (28) தன்னைக் காதலிப்பதாக ஏமாற்றி நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக, 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி, சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த வழக்கில், 2020 ஏப்ரல் 24ஆம் தேதி காசி கைது செய்யப்பட்டார். காசியின் செல்போனை போலீசார் வாங்கி பார்த்த போது, அவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து, காசியை போலீசார் விசாரித்த போது தமிழ்நாடு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்களை காசி தனது வலையில் வீழ்த்தி இருப்பது தெரியவந்தது.
இளம் பெண்கள், சிறுமிகள் என வயது வித்தியாசம் இல்லாமல் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காசி மீது பெண்கள் புகார் தெரிவித்தனர். இந்த வழக்கு தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கு 2020ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் லேப்டாப் உள்ளிட்டவற்றில் இருந்த ஆதாரங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்டார்.
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக காசி சாகும் வரை ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டார். இந்த வழக்கில் காசியின் நண்பர்களான நாகர்கோவிலைச் சேர்ந்த டேசன் ஜினோ, ராஜேஷ் என்ற ராஜேஷ் சிங் மற்றும் கௌதம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. வழக்கை விசாரித்து வந்த சி.பி.சி.ஐ.டி போலீசார், காசியின் நண்பர்களைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். அதன்படி, காசியின் நண்பர்கள் டைசன் ஜினோ, கௌதம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் அளித்த புகாரில், காசி உடன் சேர்ந்து அவரது கூட்டாளியான நாகர்கோவில் ராமன்புதூரைச் சேர்ந்த ராஜேஷ் சிங் (44) என்பவர், தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகப் புகார் அளித்து இருந்தார்.
மேலும், அந்த வழக்கில் காசியின் தந்தை தங்கப் பாண்டியன் உட்பட 3 பேர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதில், ராஜேஷ் சிங் துபாய் நாட்டிற்குச் சென்றதால் கைது செய்யப்படாமல் இருந்து வந்தார். இதனிடையே, சிபிசிஐடி போலீசார் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில், சிபிசிஐடி போலீசாருக்கு வெளிநாட்டில் இருந்து ராஜேஷ் தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பின் துபாய் நாட்டிலிருந்து சொந்த ஊர் வருவதற்காக சென்னை விமான நிலையம் வந்த ராஜேஷ் சிங்கை கைது செய்தனர். பின்னர் அவரை, நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி, நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மனைவியை நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய கணவன் கைது.. கோயம்பேட்டில் பரபரப்பு! - HUSBAND ATTACKS WIFE In Road