கரூர்: கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட தும்பிவாடி, புரவிபாளையம் காலனி அருகே சட்டவிரோதமாக இயங்கும் இரண்டு மதுக் கடைகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் அரசப்பன், பொருளாளர் தும்பிவாடி ரமேஷ், ஆதித்தமிழர் பேரவையின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் எம்.எஸ்.மணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு, அப்பகுதியைச் சேர்ந்த சம்பூரணம் என்ற பெண் அளித்த பேட்டியில், "கடந்த சில ஆண்டுகளாக சின்னதாராபுரம் அருகே உள்ள தும்பிவாடி புரவிபாளையம் காலனி பகுதி அருகே சட்ட விரோதமாக இரண்டு மதுக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மதுக்கடைக்கு அருகாமையில் கோயில்கள் மற்றும் பள்ளிகள் உள்ளன.
மேலும், பள்ளிக்கு அருகாமையில் மதுக்கடைகள் இருப்பதால், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மது அருந்திவிட்டு பள்ளிக்குச் செல்கின்றனர். மேலும், அப்பகுதியில் வசிக்கும் ஆண்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, சாலை ஓரமாக ஆடைகள் விலகுவது கூட தெரியாமல் உறங்குவதால், அவ்வழியாக பணிக்குச் செல்லும் பெண்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும், மது அருந்திவிட்டு அருகாமையில் உள்ள கோயிலில் அமர்ந்து கொண்டு ஆபாச வார்த்தைகளைப் பேசுவது உள்ளிட்ட அராஜகச் செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், இதுகுறித்து பள்ளி நிர்வாகமும் புகார் அளித்துள்ளது. ஆனால், மதுக்கடைகள் அகற்றப்படாமல் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் இடையூறாக செயல்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக இயங்கும் மதுக்கடையை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளித்துளோம்” எனத் தெரிவித்தார்.
அதன்பின் சாமானிய மக்கள் நல கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் சண்முகம் கூறியதாவது, “கரூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்கும் மதுக் கடைகள் குறித்து அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக, கரூர் பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது. அனுமதி பெறாத பார்களும் உள்ளன. இதனால் பொது இடத்தில் மதுப்பிரியர்களின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், பேருந்து நிலையத்திற்குள் குடித்துவிட்டு உறங்கும் மதுப்பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக விடுமுறை நாட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கும் மேல் மது விற்பனை நடைபெறுவது குறித்து வீடியோக்கள் எடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பினால் நடவடிக்கை மேற்கொள்ளாமல் தயக்கம் காட்டுகின்றனர்” என சாமானிய மக்கள் நல கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர 11,792 பேர் விண்ணப்பம்; தொழிற்சாலைக்கு ஏற்ப புதிய பாடதிட்டம் அறிமுகம்! - New Syllabus In Polytechnic College