கரூர்: சமூக வலைத்தளம் மூலமாக தென் கொரியா நாட்டைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்த கரூர் பெண், இருவீட்டார் சம்மதத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் செய்துள்ளார். தற்போது இது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள நடையனூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (28). பொறியியல் பட்டம் பெற்ற இவர், பெங்களூரில் தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். இவருக்கு ஆங்கிலம் மற்றும் கொரியன் மொழி தெரிந்ததால், தனது தொழில் சம்பந்தமாக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
அப்போது, தென் கொரிய நாடு டோங்யோங் பகுதியைச் சார்ந்த மின்ஜுன் கிம் (28) என்பவருடன் வலைத்தளம் மூலமாக பேசத் துவங்கியுள்ளார். மின்ஜுன் கிம் கிஸ்ட் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். தென்கொரிய நாட்டில் உள்ள தனியார் ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஓராண்டாக ஆன்லைன் மூலம் நட்பாக பழகியுள்ளனர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதனால், கடந்த மார்ச் மாதம் விஜயலட்சுமி தென் கொரியா சென்று மின்ஜுன் கிம் குடும்பத்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். மின்ஜுன் கிம் குடும்பத்தினரும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், திருமணம் கரூர் புகலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள கோம்புபாளையம் பெருமாள் கோயிலில், இரு வீட்டார் முன்னிலையில், தமிழ் முறைப்படி இன்று நடைபெற்றது.
இதில், தென் கொரியா நாட்டைச் சார்ந்த மின்ஜுன் கிம், அவரது தாய், தந்தை, அவரது நண்பர் உட்பட நான்கு நபர்கள் வந்தனர். முன்னதாக, நேற்று இரவு நடைபெற்ற நிச்சயதார்த்தத்தில் புதுமண தம்பதிகள் குழந்தைகளுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடி தங்களது சந்தோஷங்களை வெளிப்படுத்தினர்.
திருமணம் செய்து கொண்ட இருவரும், மணமகன் குடும்பத்தாருடன் தென் கொரியா நாட்டிற்குச் செல்ல உள்ளனர். விஜயலட்சுமி தற்போது சுற்றுலா விசா மூலம் சென்று, பிறகு நிரந்தர விசா பெறுவதற்கு தேர்வு எழுதவும் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: துணை மின் நிலையங்கள் தனியாரிடம் மீண்டும் ஒப்படைப்பா? மின் வாரிய ஊழியர்கள் எதிர்ப்பு! - TANGEDCO