கரூர்: தமிழகத்தில் கடந்த இரு மாதங்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பல்வேறு நகரங்களில் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளைக் கடுமையான வெயில் இருந்து பாதுகாக்கும் வகையில் பசுமை கூரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழகத்திலேயே அதிகளவு வெப்பம் பதிவாகும் மாவட்டங்களுள் ஒன்றான கரூர் மாவட்டத்தில், கரூர் - திருச்சி இடையேயான நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே கரூர் நோக்கிச் செல்லும் சாலையில் உள்ள வாகன ஓட்டிகளின் நலன் கருதி கரூர் மாவட்ட பொதுப் பணித்துறை சார்பில் தகர மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா அடுத்த கோவை சாலையில் உள்ள சிக்னல்களிலும் பசுமை கூரை அமைக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கரூர் மாநகராட்சி சார்பில் இன்று (புதன்கிழமை) அப்பகுதியில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள இரண்டு சிக்னலில் கரூர் மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தகர மேற்கூரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடும் வெயிலில் சிக்னலில் காத்திருக்கும்போது சற்று நிம்மதி அடைவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, புதுச்சேரி நகரில் சிக்னலில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவை, சென்னை, நெல்லை, காரைக்குடி உள்ளிட்ட நகரங்களில் உள்ள மக்கள் அதிகம் கூடும் சிக்னலில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது கரூரில் தகர் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பனி சூழ்ந்த பகுதிபோல் மாறிய கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணை.. குவியல் குவியலாக வெளியேறும் நுரை!