கரூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது. மேலும், தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய மார்ச் 27ஆம் தேதியே கடைசி நாளாகும்.
எனவே, அந்தந்த கட்சியால் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடத் தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.25) மதியம் 1 மணி அளவில், அதிமுக வேட்பாளர் தங்கவேல் தேர்தல் நடத்தும் அலுவலர் மீ.தங்கவேலிடம், தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக, கரூர் சுங்ககேட் தான்தோன்றிமலை பகுதி வழியாக, கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எல்.தங்கவேல், அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். பின்னர் தனது வேட்பு மனுவினை, கரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மீ.தங்கவேலிடம் தாக்கல் செய்து, உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வின்போது, அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் M.சின்னசாமி, முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் சிவம் ராஜேந்திரன், புதிய தமிழகம் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் அசோகன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் பாதர் மார்க், மாநில செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக வேட்பாளர் எல்.தங்கவேல், "அதிமுக வேட்பாளராக, கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இன்று மனு தாக்கல் செய்துள்ளேன். வரும் தேர்தலில் நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிக எளிமையாக வெற்றி பெறுவேன். நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, கூட்டணி கட்சியினர் மற்றும் மக்கள் அளித்து வரும் ஆதரவு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு தமிழகத்தை ஆண்ட போது, மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருப்பதும், தற்பொழுது நடைபெறும் திமுக அரசின் செயல்பாடுகளில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி குறித்தும் கூறி வாக்கு சேகரித்து, நிச்சயம் வெற்றி பெறுவேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதிமுக, விசிக, புதிய தமிழகம் சின்னம் விவகாரம்: சத்யபிரதா சாகுவின் விளக்கம் என்ன? - Chief Election Commissioner