சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தேர்தல் அறிவிப்பு வெளியாகும் சில நாட்களுக்கு முன்னாள், தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற பதவிகளில் இருப்பவர்கள் பதவி விலகினால், ஏன் என விளக்குவது கடமை. ஆனால், ராஜினாமாவின் காரணத்தை அவரும் சொல்லவில்லை, மத்திய அரசும் சொல்லவில்லை. தேர்தல் ஆணையம் நிலையாக இல்லை.
SBI வங்கி, தேர்தல் பத்திர விவரங்களை இன்னும் வெளியிடவில்லை. தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாகவே இந்த கணக்கு வழக்கு தொடர்பான தேர்தல் பத்திர விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கொடுக்க வேண்டும். மீண்டும் வெற்றிபெற்றால், அரசியல் அமைப்பை மாற்றுவோம் என சொல்கின்றார் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர். இது போன்ற சூழலில்தான் இந்தியாவில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு, பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை பாஜக கேள்விக்குறியாக்கி வருகிறது. மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. இந்தியாவின் ஜனநாயகத்தை, அரசியல் சாசனத்தை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை மற்றும் மாநிலங்கள் உரிமையை காப்பாற்ற வேண்டும் என்றால், இந்த அரசாங்கத்திற்கு மாற்றாக ஒரு அரசாங்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா கூட்டணி பாடுபட்டுக் கொண்டிருக்கிறது" என்று கூறினார்.
மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "புதிய தேர்தல் ஆணையர் நியமன குழுவில் எதிர்கட்சித் தலைவரும் இருப்பது சடங்கு போல் இருக்குமே தவிர, அதிகாரமாக இருக்காது. தமிழ்நாடு மத்திய அரசின் எந்த திட்டத்திற்கு முடக்கு போடுகிறார்கள் என்பதை, பிரதமர் குறிப்பிட்டுக் கூற வேண்டும். பொதுப்படையாக குற்றச்சாட்டை வைப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது.
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் கொடுக்கப்படும் 2 லட்சம் ரூபாயில், இன்று இருக்கும் விலைவாசியில் வீடு கட்ட முடியுமா? இந்த திட்டத்தால் பயனாளிகள் கடனாளிகளாக மாற்றப்படுகின்றனர். அவர்கள் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டால், அது வாரிசு அரசியல் கிடையாது. அவரை எதிர்த்தால் வாரிசு கட்சி.
மனசாட்சிபடி என்னால் முடிந்த அளவிற்கு, எனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டு சிறப்பாக செயல்பட்டுள்ளேன். எந்த சார்பும் இன்றி, யாருக்கும் பாதகம் இன்றி 5 வருடங்களில் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டுள்ளேன். கூட்டாச்சிக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் ,மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் கூட்டணியாக இந்தியா கூட்டணி இருக்கும்.
ராகுல் காந்தியின் நடைபயணம் முடிந்த பின்னர், ராகுல் காந்தி தமிழ்நாடு வரவுள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'வெறும் கையால் முழம் போடும் பிரதமர் மோடி' - மு.க.ஸ்டாலின் விமர்சனம்