சிவகங்கை: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "நமது பண்பாட்டை விட அரசியல் சாசனத்தைப் பின்பற்றுவது அவசியம். ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுவர் என்பதால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஜனநாயக முறைப்படி அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்" என்று கூறினார்.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கம் வெல்லாதது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "விளையாட்டு நமது கலாச்சாரத்திலேயே இல்லாமல் போய்விட்டது. சில பள்ளிகளில் மைதானங்களே கிடையாது, உடற்கல்வி ஆசிரியர் கிடையாது. அஸ்திவாரம் சரியில்லாததால் உச்சத்தை எட்ட முடியாது. கலாச்சாரத்தோடு விளையாட்டு இருந்தால் தான் விளையாட்டில் அதிக அளவில் ஈடுபடுவார்கள்.
பள்ளிகளில் உடற்கல்வியை கட்டாய பாடமாக்க வேண்டும். பொதுத் தேர்வில் உடற்கல்வியினை அடிப்படை பாடமாக வைக்க வேண்டும். முந்தைய காலகட்டத்தை விட மத்திய அரசு, தற்போது நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு அதிக ஊக்கம் அளித்துள்ளனர். இந்திய அளவில் விளையாட்டில் எந்த மாற்றமும் வரவில்லை" என்று பதிலளித்தார்.
மேலும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவைச் சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் திருமயம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலந்தாலோசித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரத்திடம், திருமாவளவனின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "திருமாவளவன் ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் குறிப்பிடுகிறாரா? சமுதாயத்தைக் குறிப்பிடுகிறாரா? என்று பார்க்க வேண்டும். அவர் சமுதாயத்தை தான் குறிப்பிடுகிறார். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். பல மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் தலைமையை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். அதை நான் கண்கூடாக பார்த்துள்ளேன். அனுபவ ரீதியாகவும் அறிந்துள்ளேன்.
பல மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சர் என்று அறிவித்தால், சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இன்னும் முன்னேற்றம் வரவில்லை என்று திருமாவளவன் சொல்லும் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் கக்கனுக்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முக்கியமான அமைச்சர் பொறுப்புக்கு வர முடியவில்லை என்பதை ஆட்சி செய்பவர்களிடம் தான் கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு அரசியல் தொடர்பான கொலையாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவர்களுக்குள் ஏற்பட்ட முன் விரோதமா அல்லது வர்த்தக ரீதியான விரோதமா என்பது குறித்து விசாரணையில் தெரியவரும். ஆனால், அரசியல் கொலை அல்ல. அரசியல்வாதிகள் யாரும் ரவுடியாக மாறுவது கிடையாது, ரவுடிகள் வேண்டுமானால் பல்வேறு அரசியல் கட்சிகளில் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக சேர்ந்து கொள்கிறார்கள். தற்போது பாஜகவில் அதிகம் உள்ளார்கள்" என்று பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து, விஜய் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்டபோது, "விஜய் கட்சி தொடங்கட்டும். ஆனால், அவர் முதலில் அவருடைய கொள்கை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மத்திய பட்ஜெட், ஹிண்டன்பர்க் விவகாரம் ஆகியவை குறித்து அவருடைய கருத்தை அவர் வெளியிட வேண்டும்.
குறிப்பாக, இது போன்ற விஷயங்களில் அவர் மௌனமாக இருக்காமல், இந்த விவகாரங்களில் அவருடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். கட்சித் தலைவர்களுக்கு வாழ்த்து கூறுவதும், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதும் பெரிதல்ல. ஒரு பிரச்னையில் அவருடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து அவர் வெளிப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.
இதனை அடுத்து, செபி விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், "முதலாவதாக வந்த ஹிண்டன்பர்க் அறிக்கையிலேயே செபி தனது நிலைப்பாட்டையும், அறிக்கையும் பொய்யானதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் செபிக்கு அனைத்து விவரங்களும் தெரிந்தும் அதை உச்ச நீதிமன்றத்தில் மறைத்துள்ளனர். ஹர்ஷத் மேத்தா முறைகேட்டுக்கும், தற்போது செபிக்கு எதிரான ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுக்கும் எந்த விதமான சம்பந்தமும் தொடர்பும் கிடையாது. அது வேற விஷயம், இது வேற விஷயம்" என்று பதிலளித்தார்.
மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "பாஜக தமிழகத்தில் ஒரு நிராகரிக்கப்பட வேண்டிய கட்சி. மக்கள் அவர்களை நிராகரித்து விட்டனர். தேர்தல் விளையாட்டில் பாஜக இல்லை. பாஜக மற்றும் அண்ணாமலை தொடர்பாக செல்லூர் ராஜு கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. பாஜகவோடு எந்த கட்சி சேர்ந்தாலும் அந்த கட்சி உருப்படாமல் போய்விடும்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: என் பெயரைப் பார்த்தாலே திமுகவினர் நடுங்குகின்றனர்.. குஷ்பூ பேச்சு!