கன்னியாகுமரி: தெற்கு ரயில்வே சார்பாக சமீபத்தில் கேரளாவில் இயங்கும் திருவனந்தபுரம் - கண்ணூர் ஜனசதாப்தி ரயிலை (Jan Shatabdi Express) மேம்படுத்தப்பட்ட எல்எச்பி பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றம் செய்தது. அவ்வாறு மாற்றம் செய்த பிறகு பழைய 21 பெட்டிகள் கொண்ட ஜனசதாப்தி ரயில் பெட்டிகள் சென்னையில் காலியாக யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காலியாக யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெட்டிகளை வைத்து நாகர்கோவில் - கோயம்புத்தூர் மார்க்கத்தில் சிறப்பு ரயிலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், "தமிழ்நாட்டில் 2வது பெரிய நகரமாகவும், தமிழ்நாட்டின் மான்செஸ்டராகவும் கோவை விளங்குகிறது. இதனால் தென்மாவட்டங்களில் இருந்து அதிகமானோர் அங்கு சென்று பணிபுரிந்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் தென்மாவட்டங்களிலிருந்து அதிக அளவில் மாணவ மாணவிகள் கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
நீண்ட நாள் கோரிக்கை: தென் மாவட்டங்களில் உள்ள வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் கோவைக்கு பல்வேறு வணிகம் தொடர்பாக தினசரி பயணிக்கின்றனர். தென்மாவட்டங்களில் இருந்து தற்போது கோயம்புத்தூர் தினசரி ரயில்கள் என்று பார்த்தால் மிக குறைந்த அளவே இயக்கப்படுகிறது. பெருகி வரும் பயணிகளின் தேவையை கருதி கோவை மார்க்கத்தில் கூடுதல் ரயில்கள் அறிவித்து இயக்க வேண்டும் என்பது தென்மாவட்ட பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.
திண்டுக்கல்லிருந்து பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வழியாக உள்ள பாதை அகல பாதையாக மாற்றப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடம் வழியாக பயணித்தால் ஈரோடு வழியாக செல்வதை காட்டிலும் பயண நேரம் குறைவாகும். இந்த ஜனசதாப்தி ரயில்கள் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களை காட்டிலும் அதிகமாக பயணித்து மிகக்குறைந்த நிறுத்தங்களில் நின்று செல்லும்படியாக இயக்கப்படுகிறது.
ஜனசதாப்தி ரயில் தமிழ்நாட்டில் இல்லாதது ஏன்?: இதுபோன்ற ரயில்களில் ஜனசதாப்தி என்ற பெயரில் பகல் நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள் மிகவும் பிரபலம் ஆகும். இந்த ரயில்களில் சாதாரண நடுத்தர பயணிகள் பயணிக்கும் வகையில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். தமிழகத்தில் இதுபோன்று இயக்கப்படும் ரயில்களில் ஜனசதாப்தி ரயில் கோவை - மயிலாடுதுறை மற்றும் சென்னை - விஜயவாடா ஆகிய 2 இடத்தில் மட்டுமே தமிழ்நாட்டில் இயக்கப்படுகிறது. அதேபோல், மிக சிறிய மாநிலமான கேரளாவில் திருவனந்தபுரம் - கோழிக்கோடு, திருவனந்தபுரம் - கண்ணூர் ஆகிய 2 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
தென் மாவட்டங்களில் இது போன்ற எந்த ஒரு ரயிலும் இதுவரை இயக்கப்படவில்லை. இந்த ஜனசதாப்தி ரயில்களில் திருவனந்தபுரம் - கண்ணூர் ஜனசதாப்தி ரயில் 500 கி.மீ தூரத்தில் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலிருந்து மதுரை, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு 461 கி.மீ தூரம் மட்டுமே உள்ளது. ஆகையால் இந்த வழித்தடத்தில் ஜனசதாப்தி சிறப்பு ரயில் இயக்க நல்ல வசதி வாய்ப்புகள் உள்ளன. இதுமட்டுமில்லாமல் கோவையிலிருந்து திண்டுக்கல் வரை உள்ள பாதை அகலரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்ட புதிய பாதை ஆகும். இங்கு ரயில்கள் மிகக்குறைந்த அளவே இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு புதிய வசதி.. ரயில்வே கொடுத்த சூப்பர் அப்டேட்
திண்டுக்கல் முதல் மதுரை வரை இருவழிப்பாதை ஆகும். மதுரை முதல் நாகர்கோவில் வரை உள்ள பாதையில் பகல் நேரத்தில் பெரிய அளவில் தினசரி ரயில்கள் இல்லாத காரணத்தால், இந்த தடத்தில் ரயில் இயக்க நல்ல வசதி வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. தற்போது நாகர்கோவில் முதல் திண்டுக்கல் வரை உள்ள பாதையில் நாகர்கோவில் - சென்னை வாராந்திர ரயில் கடக்க 5 மணி நேரம் 5 நிமிடங்கள் எடுத்து கொள்கிறது. அதேபோல், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 5 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுத்து கொள்கிறது.
பகல் நேரத்தில் கட்டணம் குறைவு: தென்மாவட்ட பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நாகர்கோவிலிருந்து பகல்நேரத்தில் பயணிக்கும் விதத்தில் நெல்லை, மதுரை, திண்டுக்கல், பழநி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு பகல்நேர ஜனசதாப்தி சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பகல்நேர ஜனசதாப்தி தினசரி ரயில் இயக்கப்பட்டால் தென்மாவட்டங்களிலிருந்து கோவை, மதுரை போன்ற பல்வேறு இடங்களுக்கு பல்வேறு பணிகள் நிமித்தம் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இரவு நேர ரயில்களில் உள்ள கட்டணத்தை காட்டிலும் பகல்நேரங்களில் இயக்கப்படும் ரயில்களில் கட்டணம் குறைவு. அதனால் தமிழகத்தில் பகல் நேர ரயில்கள் அதிக அளவில் அறிவித்து இயக்கினால், தமிழக பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ரயில் காலையில் நாகர்கோவிலிருந்து புறப்பட்டு மதியம் கோயம்பத்தூர் சென்றுவிட்டு, மதியம் உடனடியாக கோயம்புத்தூரிலிருந்து புறப்பட்டு இரவு நாகர்கோவில் வந்துசேருமாறு இயக்கலாம்.
இந்த ரயிலுக்கு நாகர்கோவிலில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். தற்போது நாகர்கோவிலில் புதிய நடைமேடை பணிகள் நடைபெற்றுவருவதால், இந்த ரயிலை கன்னியாகுமரியிலிருந்து புறப்படுமாறு வாரத்துக்கு 4 நாட்கள் இயக்கலாம்" என்றும் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்