கன்னியாகுமரி: இந்திய திருநாட்டின் தெற்கு பகுதி நுழைவு வாயிலாக பார்க்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம், இயற்கை எழிலோடு சுற்றுலாத் தலங்கள், ஆன்மீகத் தலங்கள் என எண்ண செல்வங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 1967-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காமராஜர் தனது சொந்த ஊரான விருதுநகரில் தோல்வியைச் சந்தித்த போதும், இங்கு எம்பியாக இருந்த மார்சல் நேசமணி உயிரிழந்த நிலையில், 1969-இல் நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அடுத்தபடியாக, 1971-ல் மீண்டும் இதே தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் காமராஜர் வெற்றி பெற்றிருந்தார். அனைத்து தொகுதிகளிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளுக்கு செல்வாக்கு நிறைந்துள்ள நிலையில், இந்த தொகுதி மட்டும் அதற்கு விதிவிலக்கு. காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு இங்குள்ள மக்களிடம் செல்வாக்கு அதிகம்.
2009-ல் தொகுதி மறுசீரமைப்பின் போது கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட இத்தொகுதி, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முன்னதாக இத்தொகுதியில் இருந்த திருவட்டார் சட்டசபை நீக்கப்பட்டது.
மீன்பிடித்தல், ரப்பர் பால் வடித்தல், தேன் உற்பத்தி, முந்திரி தொழிற்சாலை, விவசாயம் உள்ளிட்ட பல தொழில்களைக் கொண்டது, இத்தொகுதி. 1957 முதல் 2021 வரை நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி 11 முறை, தமாகா மற்றும் பா.ஜனதா கட்சிகள் தலா 2 முறை, ஸ்தாபன காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை என வெற்றி பெற்றுள்ளன.
இந்த கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை கிறிஸ்தவ நாடார் 30.08%, இந்து நாடார் 29.38%, கிறிஸ்தவ மீனவர் 10.20%, தலித் கிறிஸ்தவர் 4.48%, இஸ்லாமியர்கள் 4.43%, இந்து நாயர்கள் 4.03%, இந்து ஆதிதிராவிடர் 2.29%, ஈழவர் மற்றும் பணிக்கர் 1.61%, கோனார் 0.42%, அருந்ததியர் 0.40% மக்கள் வசிக்கின்றனர். இது தவிர பிராமணர், முதலியார், பழங்குடியின காணி உள்ளிட்ட இன்னும் பிற சமுதாய மக்களும் பரவலாக வசிக்கின்றனர்.
இங்கு ரப்பருக்கு குறைந்தபட்ச ஆதாய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், மத்திய - மாநில அரசுகளின் ரப்பர் தொழிற்சாலை, தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், தென்னை வாரிய அலுவலகம், சுற்றுலாவை மேம்படுத்த கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும், ஏ.வி.எம். கால்வாயை சீரமைத்து நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவை நீண்டகால கோரிக்கைகளாக உள்ளது.
மற்றொரு புறம், மத்திய அமைச்சராக இருந்தபோது, பல கோடிக்கணக்கில் நலத்திட்டங்களை கன்னியாகுமரிக்கு கொண்டு வந்ததாகவும், இதனால், தனக்கே மக்களிடையே ஆதரவு உள்ளதாகவும் கூறி தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார், பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன். ஆகவே, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் விஜய் வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இடையே தான் போட்டி எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியோரை விடுத்து மக்கள் மாற்றத்தை விரும்புவதால், இம்முறை அதிமுகவிற்கே வெற்றி கிட்டும் என்ற குறிக்கோளோடு களம் காண்கிறார், அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்.
2021-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இங்கு பொன்.ராதாகிருஷ்ணன் 4,38,087 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், விஜய் வசந்த் 5,76,037 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனையோ வேட்பாளர்களுக்கும் தனித்தனியாக வாக்கு வங்கி இருந்தாலும், நடுநிலையாளர்களையும், இளம் தலைமுறையினரால் தான் வெற்றி தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ''நீங்கள் சுயமரியாதையோடு முதலமைச்சராக இருக்கிறீர்களா?'' - சிபிஐ முத்தரசன் கேள்வி.. - Lok Sabha Election 2024