மதுரை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி இன்று (ஏப்.4) மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
இந்த பிரச்சார கூட்டத்தில், மதுரை மாநகரச் செயலாளர் கோ.தளபதி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் மற்றும் இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி, "உங்கள் தொகுதியின் வேட்பாளர் சு.வெங்கடேசன், தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, தமிழ் வாழ்வியல் குறித்தான பல்வேறு நூல்களை எழுதியவர். நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக ஒலித்தவர்.
இந்த பகுதியில் இருக்கக் கூடிய மக்கள் மற்ற இடங்களை எல்லாம் விட, மிகத் தெளிவாக தன்னுடைய முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள். மதுரை மாவட்டத்தில் நெய்பர் எனும் தேசிய மருந்து சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் அண்ணன் அழகிரி மத்தியில் அமைச்சராக இருந்த பொழுது அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இப்பொழுது வரை அந்த திட்டம் பாஜகவால் செயல்படுத்தப்படவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே?: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு சரி, அதற்குப் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்க இல்லை. நம் வீட்டுப் பிள்ளைகள் ராமநாதபுரம் சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளனர். அதற்கு எல்லாம் பாஜகவிற்கு நிதி உள்ளது. ஆனால், நமக்கு என்றால் மட்டும் ஜப்பான் நாட்டிலிருந்து நிதி வந்தால் தான் செய்ய முடியும் என்று கூறுகின்றனர்.
பன்னாட்டு விமான நிலையம்: மதுரை விமான நிலையத்தை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அதைப் பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்கப் பலமுறை கேட்டுக் கொண்டோம். இதுவரை அறிவிக்கவில்லை. அதே வேளையில் ஒன்றுமே இல்லாத உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி, குஷி நகர், லக்னோ ஆகிய இடங்களில் பன்னாட்டு விமான நிலையம் கொண்டு வந்துள்ளனர்.
இந்த பாஜக அதானி, அம்பானிக்கு ஏதும் வேண்டுமென்றால் உடனடியாக செய்வார்கள். நமக்கு என்றால் ஒன்றுமே செய்ய மாட்டார்கள். அம்பானி வீட்டுத் திருமணத்திற்காகப் பாதுகாப்புப் படையின் விமான நிலையத்தை 10 நாட்களில் பன்னாட்டு விமான நிலையமாக மாற்றினர்.
பொய் வழக்குப் போடும் பாஜக: முதியோர் ஓய்வூதியம் வாங்கும் இருவர்கள் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்து உள்ளதாகப் பொய் வழக்கு தொடர்ந்து உள்ளது பாஜக. காரணம் என்னவென்றால் பாஜகவின் முக்கிய பிரமுகர் அவர்களின் நிலத்தை அபகரிக்க முயன்றார். அதற்கு எதிராக இவர்கள் போராடினார்கள் என்ற காரணத்தினால் இவர்கள் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மகளிருக்கு ரூ.1 லட்சம்: மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் பொழுது காங்கிரஸ் அறிவித்த ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும். மகளிர் உரிமைத் தொகை மூலம் வழங்கும் மாதம் ரூ.1000த்துடன் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
மதுரையில் இளைஞர், இளம்பெண்கள் பயன்பெறும் வகையில், அழகிய கலைஞர் நூலகத்தை நமது முதலமைச்சர் கொண்டு வந்தார். மதுரை நகரை மாநகராட்சியாக உயர்த்தியது மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தான். மேலும், மதுரைக்கு டைடல் பார்க் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பல்வேறு தொழில் தொடங்குவதற்காக, நிதி, நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பேசினார்.
இதையும் படிங்க: விடாமுயற்சி ஷூட்டிங்கில் பயங்கர விபத்து.. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ! - Vidaamuyarchi Ajith