தூத்துக்குடி: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் தொடர்ச்சியாக வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27ஆம் தேதி ஆகும். மனுத் தாக்கலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டும் உள்ளதால், முக்கிய கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக, தூத்துக்குடி சிட்டிங் எம்பி கனிமொழி போட்டியிடுகிறார். இந்நிலையில், இவர் இன்று (செவ்வாய்கிழமை) எட்டயபுரம் ரோட்டில், கலைஞர் அரங்கம் முன்பு உள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரரான மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து கனிமொழி கூறியதாவது, “தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்பு அளித்ததற்கு நன்றி. தொகுதியில் எங்கு சென்றாலும், இந்தியா கூட்டணிக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்து வரும் சூழ்நிலை உள்ளது. இன்று காலை தூத்துக்குடி மாநகரப் பகுதியில் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டபோது, மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு என்பது நன்றாக உள்ளது” என்று தெரிவித்தார்.
அவருடன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்திய தேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் சி.வி.சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். தமாகா சார்பில் விஜயசீலன் மற்றும் நாதக சார்பில் ரொவினா ரூத் ஜேன் போட்டியிடுகின்றனர்.