தூத்துக்குடி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் தூத்துக்குடி அடுத்த எட்டயபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கம் அருகே அமைக்கப்பட்டுள்ள காரியாலத்தை, தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கனிமொழி கூறுகையில், "பொதுவாகவே பாஜக தன் மீது விமர்சனங்களை வைக்கக்கூடியவர்கள், தன்னை எதிர்க்கக்கூடிய அரசியல் தலைவர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் மீது பொய் செய்தியை கட்டம்கட்டி வருமான வரித்துறை, உளவுத்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி மிரட்டி வருகிறது.
இதன் மூலம் பாஜகவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கக்கூடியவர்களை, இது போன்ற மிரட்டல் நடவடிக்கைகள் மேற்கொண்டு, அவர்களை ஒடுக்கி விடலாம் என்று பாஜகவினர் கனவு கண்டு கொண்டுள்ளனர். டெல்லி ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தவரை, முதலில் துணை முதலமைச்சரை கைது செய்தார்கள். தற்போது முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவாலை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு தொடர்ந்து அரசியல் தலைவர்களை கைது செய்வது, அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது, அமலாக்கத்துறை ரெய்டு பயன்படுத்துவது மற்றும் குறிப்பாக, தேர்தல் நேரம் பார்த்து காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்குவது போன்ற நடவடிக்கை மேற்கொண்டு மிரட்டி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையில் பாஜகவினர் உள்ளனர்.
இதையும் படிங்க: "அறந்தாங்கி தொகுதியை ஒதுக்காவிட்டால் தற்கொலை" - பகீர் கிளப்பிய திமுக முன்னாள் எம்.எல்.ஏ! - India Alliance Party Meeting
மேலும், இவ்வாறு திடீரென மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள் எந்த நோக்கத்தில் நடத்தப்படுகிறது என்பது குறித்து மக்களுக்கு புரிதல் உள்ளது. மேலும், பாஜகவினர் தோல்வி பயத்தில் உள்ள காரணத்தினால்தான் அவர்களுக்கு எதிராக யார் என்ன கருத்து சொன்னாலும், அவர்களை சிறையில் அடைக்க முயற்சி செய்கின்றனர்.
ஆனால், இந்திய மக்கள் அனைவரும் ஜனநாயகத்தின் மீது அதிக அளவி நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜகவின் இந்த நடவடிக்கையின் விளைவு தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும். ஜனநாயகப் படுகொலை செய்யும் யாரையும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, வேட்பு மனு தாக்கல் செய்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "26ஆம் தேதி காலை வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும், அன்றைய தினம் மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டம் சிந்தலக்கரை பகுதியில் நடைபெற உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "எனக்கு 7 மொழிகள் தெரியும்" - வாக்கு வேட்டையை தொடங்கிய தேனி அதிமுக வேட்பாளர்! - Theni AIADMK Candidate|