திருச்சி: வருகின்ற 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக பிரச்சார பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரைவைகோவை ஆதரித்து இன்று (ஏப்ரல் 02) மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அவரை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அருணாச்சலம் மற்றும் பலர் திரளாக வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமலஹாசன், "தேர்தல் ரொம்ப சிறப்பாக உள்ளது. இந்தியாவில் பழைய கோட்டைகளில் ஒன்று செங்கோட்டை பாரத பிரதமர் யாராயிருந்தாலும் அங்க இருந்து தான் பேசுவார்கள். அதற்கும் மூத்தது இந்த செயின்ட்ஜார்ஜ் கோட்டை.
இந்த இரண்டும் மூத்தது திருச்சி மலைக்கோட்டை. அந்த கோட்டை திராவிட முன்னேற்றக் கழக கோட்டையாக உள்ளது. அந்த கோட்டையில் எனக்கு கதவுகள் திறந்து இருக்கிறது. நான் வந்திருக்கிறேன். நாட்டை காக்கும் வேள்வியில் நானும் அங்கே உள்ளேன்" என்றார். மேலும், திருச்சி திருப்பு முனை என்ற கூறுவார்களே என்ற கேள்விக்கு? "மிகையான வார்த்தை அல்ல, நேர்மையான நம்பிக்கை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "கச்சத்தீவு விவகாரத்தை உணர்வுரீதியான பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்" - மத்திய சென்னை பாஜக வேட்பாளர்! - Lok Sabha Election 2024