சென்னை: மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்ட தேவநாதன் உள்பட 3 பேரும், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, பண மோசடி எதுவும் செய்யவில்லை என்றும், அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. வயது முதிர்வு மற்றும் முதுகுத்தண்டுவட பிரச்னை உள்ளிட்ட உடல் நல பிரச்னை உள்ளதாக தேவநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, காவல்துறை தரப்பில், வழக்கு விசாரணையில் இருப்பதால் எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்த நீதிபதி, தேவநாதன் யாதவ் உள்பட மூவரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: ரூ.24.5 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவை தொடர்ந்து மேலும் இருவர் கைது!