தருமபுரி: தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 6) வெளியாகியது. இதில், மாநிலம் முழுவதும் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 97.45 சதவீதம் தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது.
இந்நிலையில், தருமபுரி பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி படித்த பாலக்கோடு நீதிமன்ற நீதிபதியின் மகள் ஸ்ருதி என்ற மாணவி, பொதுத்தேர்வில் 600க்கு 590 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர், தமிழில்- 98, ஆங்கிலத்தில் - 96, இயற்பியல் -100, வேதியியல் -100, தாவரவியல் -98 மற்றும் கணிதவியலில் 98 என மொத்தம் 600க்கு 590 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இதனால், முதலிடம் பெற்ற மாணவிக்குப் பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் இனிப்பு வழங்கியும், சால்வை அணிவித்தும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து முதலிடம் பெற்ற மாணவி ஸ்ருதி கூறுகையில், "பள்ளி ஆசிரியர்கள் அன்றாடம் கற்றுத் தரும் பாடங்களை அன்றைய தினத்தில் படித்தாலே போதுமானது.இதற்கென்று தனியாகச் சிறப்பு வகுப்புக்கள் எதுவும் போகவில்லை. அதே போன்று இரவு நேரங்களில் நீண்ட நேரம் கண்விழித்துப் படிக்கவில்லை. ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி படித்தேன்.
கோவை வேளாண்மை கல்லூரியில் தாவரவியல் விஞ்ஞானி ஆனர்ஸ் படிப்பு படித்து, இந்தியன் வேளாண்மை ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டில் (Indian Agricultural Research Institute) தாவரவியல் விஞ்ஞானியாக(scientist) பணி புரிவதே தனது லட்சியம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கன்னியாகுமரி கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு.. சுற்றுலா சென்ற போது நிகழ்ந்த சோகம்! - Kanniyakumari Tourist Death