திருப்பத்தூர்: ஜார்க்கண்ட மாநிலம், பெல்டிகிரி பகுதியைச் சேர்ந்தவர் சோம்நாத் சோரன் (25). இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் கேரள மாநிலத்திற்கு கூலி வேலைக்காக நேற்று முன்தினம் (மே 18) தன்பாத்தில் இருந்து புறப்பட்ட ஆலப்புழா விரைவு ரயிலில் வந்துள்ளார்.
இந்த நிலையில், ஆலப்புழா விரைவு ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் அதிகாலை 3 மணி அளவில் வந்து கொண்டிருந்த போது, சோம்நாத் சோரன் ஓடும் ரயிலில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த சோம்நாத் சோரனின் நண்பர்கள் உடனடியாக விரைவு ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து விரைவு ரயிலை நிறுத்தியுள்ளனர். விரைவு ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நின்ற நிலையில், அவரது நண்பர்கள் சோம்நாத் சோரனை தேடி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து சோம்நாத் சோரனின் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சோம்நாத் சோரனின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இளையராஜா காப்புரிமை விவகாரம்; பேராசையில் பணம் கேட்பதா? - சீமானின் கருத்து என்ன? - Seeman About Ilayaraja