தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே காவல் ஆய்வாளரின், பூட்டிய வீட்டின் கதவை உடைத்த மர்மநபர்கள் 3 கிராம் தங்க தோடு, 6 ஜோடி வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் குறித்து சுவாமிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் விசாரணையில், கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் சரகம், திருவலஞ்சுழி விஜிபி நகரைச் சோ்ந்தவா் டி.கவிதா. கும்பகோணம் காவல் உட்கோட்டத்தில், காவல் ஆய்வாளராக பணியாற்றிய காவல் ஆய்வாளர் கவிதா, தற்போது காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் காரைக்குடியில் பணியாற்றுவதால், திருவலஞ்சுழி பகுதியில் உள்ள இவரது வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில், இவரது வீட்டின் முன் பக்க கம்பிக் கதவு திறந்து கிடப்பதாக கடந்த 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அக்கம்பக்கத்தினா் கவிதாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலில் பேரில், கவிதா வீட்டுக்குச் சென்று பாா்த்துள்ளார்.
இதில், வீட்டின் கதவு உடைக்கப் பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து, வீட்டிற்குள் சென்று பார்த்த நிலையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிய நிலையில் இருந்துள்ளது. மேலும், அறையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 3 கிராம் தங்கத் தோடுகள், 6 வெள்ளிக் கொலுசுகள் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
மேலும், வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்ததால் அதன் இணைப்பை துண்டித்து விட்டு அதன் பதிவாகியிருந்த தகவல்களை ஹார்டிஸ்க் உடன் திருடிச் சென்றனர். அதோடு மட்டுமின்றி, வீட்டிலிருந்த காவல் ஆய்வாளர் புகைப்படத்தில், “நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு விலை மதிப்புமிக்கப் பொருட்கள் எதுவும் இல்லை” என்று தங்களது ஏமாற்றத்தை பதிவு செய்து விட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து, கொள்ளை சம்பவம் குறித்து அவர், சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசித் தேடிவருகின்றனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளைத் திருடி சென்றதால், கொள்ளை சம்பவம் குறித்து தடயவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகள் குறித்த முதற்கட்ட விசாரணையைக் போலீசார் தொடங்கியுள்ளனர்.
ஆள்மாட்டம் அதிகமுள்ள குடியிருப்பு பகுதியில், காவல்துறை ஆய்வாளரின் பூட்டிய வீட்டை உடைத்து அரங்கேறிய இந்த கொள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல்: ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கூட்டணி உறுதி!